தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மின் பிரச்சினைகளில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும் பாமக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வடசென்னை, மேட்டூர், நெய்வேலி அனல் மின் நிலையங்களிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதே மின்வெட்டுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றாலை மின்னுற்பத்தி முற்றிலுமாக ஓய்ந்துவிட்டதால் மின்நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கிறது.
நகர்ப்புறங்களில் 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் 6 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னையில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரம் தவிர, அறிவிக்கப்படாத மின்தடையும் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடியால் ஏற்கெனவே இந்த தொழிற்சாலைகள் நலிவடைந்திருந்த நிலையில், இப்போதைய மின்வெட்டு அவற்றின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மின்வெட்டு தலைதூக்கியிருப்பதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்வெட்டை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததே இந்த அவலநிலைக்கு காரணம் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் மின்வெட்டு முற்றிலுமாக நீங்கிவிடும் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கூட மின்வெட்டுக்கு தீர்வு காணப்படவில்லை.
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது மின்வெட்டு குறைவதும், உற்பத்தி குறையும் போது மின்வெட்டு அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மின்வெட்டைக் குறைப்பதில் காற்றாலைகளுக்கு இருக்கும் அக்கறை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூடும்போதும் மின்வெட்டு குறைந்துவிடும் என்று ஜெயலலிதா அறிவிப்பதும், அதற்கு அடுத்த நாளிலிருந்து மின்வெட்டு அதிகரிப்பதும் வழக்கமாகி விட்டது.
கடந்த 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று கூறி மீண்டும் ஒருமுறை, அதாவது 11 ஆவது முறையாக வாய்தா வாங்கியிருக்கிறார்.
உண்மையில் தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.
கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக எந்த ஒரு மின்திட்டத்திற்கான பணிகளுமே தொடங்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறேன். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசின் தோல்வியைக் கண்டித்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இன்னும் உறக்கத்தைக் கலைத்து விழித்தெழவில்லை.
மின்னுற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் இவ்வளவு அலட்சியம் காட்டும் ஜெயலலிதா தான், தமிழகத்தை வெகுவிரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என 3 மாதங்களுக்கு ஒருமுறை அறைகூவல் விடுத்து வருகிறார்.
கோடைக்காலம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் மின்வெட்டு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மின்துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டு அதிகரித்தால் அனைத்துத் துறையினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, தமிழக ஆட்சியாளர்கள் வெற்று வசனங்களை பேசுவதை விடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago