சட்டம், ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கலாகாது என மாதொருபாகன் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இச்சமூகத்தின் முற்போக்குவாதிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
அதேவேளையில், அறியப்பட்ட பத்தி எழுத்தாளரும், விமர்சகருமான குருமூர்த்தி, இத்தீர்ப்பின் சட்ட முகாந்திரத்தையும், தர்க்க வாதங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்த வழக்கின் தீர்ப்பை தான் எதிர்ப்பதற்கான காரணங்களை விரிவாக விளக்குகிறார்.
குருமூர்த்தியுடனான நேர்காணலின் தொகுப்பு:
'மாதொருபாகன்' வழக்கின் தீர்ப்பில் நீங்கள் முன்வைக்கும் முதன்மை சர்ச்சை என்ன?
இத்தீர்ப்பு உண்மையின் அடிப்படையானதல்ல. மாதொருபாகன் நாவலின் முன்னுரையில், திருச்செங்கோட்டில் நடப்பதாக தான் குறிப்பிட்டுள்ள சம்பிரதாயம் குறித்த தகவல்களை ஆய்வுகள் மூலம் தான் உறுதிப்படுத்திய பின்னரே எழுதியாக குறிப்பிட்டுள்ளார் பெருமாள் முருகன். ஆனால், பின்நாளில் அவரை அந்தக் கருத்தை திரும்பப்பெற்றிருக்கிறார். அவர் அவ்வாறு திரும்பப் பெற்றதாலேயே அந்நாவல் புனைவு என எந்த அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் திருச்செங்கோடு சம்பிரதாயம் குறித்து தான் எழுதவில்லை என்ற பெருமாள் முருகனின் வாதத்தை ஏற்றுக்கொண்டதற்கான நியாயத்தை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு தம்பதியைப் பற்றி நாவல் மட்டுமல்ல அது ஓர் ஊரில் பின்பற்றப்பட்டதாக கூறப்பட்ட பழக்கத்தின் விவரிப்பு.
அடிப்படையில், அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே ஆனால் அதன் கட்டமைப்பு ஆய்வு அடிப்படையிலானது. அவர் அடிப்படைத் தரவுகளில் தவறிழைத்ததாகவே நான் கருதுகிறேன்.
எனது இரண்டாவது வாதம், இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் எப்பகுதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படி என்றால் திருச்செங்கோடு பற்றிய குறிப்புகள் நாவலில் எப்படி வந்தது. அந்தப் பகுதியில் கொங்கு சமூகத்தினரே இருக்கின்றனர். இரண்டாவதாக பெருமாள் முருகன் 'சாமி கொடுத்த பிள்ளை' (Sami Kudutha Pillai) என்ற சடங்கு குறித்து பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பழமொழி இன்னும் அங்கு வழக்கத்தில் இருக்கிறது.
அடுத்ததாக மாதொருபாகன் சிலை புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருக்கிறது. இந்த உண்மைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துரைக்க சரியான வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்கு ஆலோசனைகள் வழங்க முத்திரை பதித்த வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், பிரபலமானவர்கள் எல்லோரும் முற்போக்குவாதிகளுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும், பதிப்பாளர்களுக்காகவும் ஆஜராகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்துக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் நீதிமன்றங்கள் உட்பட அனைத்துக் கருவிகளும் தாராளவாதம் என்ற சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. மாற்றுக் கருத்தை தெரிவித்தால் அவர்கள் பிற்போக்குவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த வழக்கில் வெகுவாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்கள் கருத்தை இந்த நீதிமன்றம் கேட்கவே இல்லை. நியாயமாக, மாதொருபாகனில் குறிப்பிட்டப்பட்டுள்ள அந்த சடங்கை பின்பற்றும் சில பெண்களை வரவழைத்து அவர்களிடம் நீதிமன்றம் கருத்து கேட்டிருக்க வேண்டும். மூன்றாம் நபரின் கருவைச் சுமப்பதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டிவிட்டு அவர்களிடம் கருத்து கேட்க மறுக்கிறீர்கள். இந்த தீர்ப்பு மிகத் தவறான எண்ணத்தை விதைத்துள்ளது. எனவே தீர்ப்பை திரும்பப்பெற்றுவிட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.
மாதொருபாகன் எதிர்ப்பு போராட்டங்களை நீதிமன்றம் அணுகிய விதத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். புத்தகம் வெளியான 4 ஆண்டுகளுக்குப் பின்னரே சர்ச்சைகள் வெடித்தததால் நீதிமன்றம் இந்தப் போராட்டங்கள் ஜோடனை என நம்புகிறது. இத்தகைய முகாந்திரம் அற்ற போராட்டங்களுக்கு நீதிமன்றம் செவி சாய்க்க வேண்டுமா?
இப்புத்தகத்தின் கருத்து தொடர்பாக எவ்வித எதிர்ப்பும் இதற்கு முன்னதாக கிளம்பவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா. இப்புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியானது என்பதற்காக அதன் உள்ளடக்கத்தை அப்பகுதிவாசிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்து ஏதாவது விமர்சனங்கள் வந்திருக்கின்றனவா.
இந்தப் புத்தகம் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புத்தகத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளன.
அந்தப் புத்தகத்துக்கு விருது கிடைத்திருக்கலாம். ஒரு புத்தகம் வெளிவருவது மட்டுமே படைப்பு முழுமை பெறுவதில்லை. அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாததன் காரணத்தாலேயே மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சர்ச்சை கருத்துகள் குறித்து வெகு காலத்துக்குப் பின்னரே தெரிய வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாதொருபாகன் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பின்னணியாக ஏதாவது அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ இருந்திருந்தால் இந்தப் போராட்டம் ஜோடனை எனக் கூறியிருக்கலாம். ஆனால், மக்களே அந்தப் புத்தகத்தின் சர்ச்சையை உணர்ந்து கொண்டிருப்பதால் சற்று காலம் எடுத்துக்கொண்டுள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.
ஆனால் இது ஆபத்தானது அல்லவா? இதைத் தான் நீதிமன்றம் முகம் தெரியாத கும்பலின் போராட்டம் எனக் கூறுகிறது?
இல்லவே இல்லை. முகமற்றது என்றால் அது சட்டென உருவாகும் போராட்டம். இங்கு நடந்த போராட்டத்தின் பின்னணியில் ஹர்திக் படேல் யாரும் இல்லையே. இந்த போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. வெள்ளாள கவுண்டர், தலித், அருந்ததியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த செய்திகளை ஊடகங்கள் சரியான கோணத்தில் வெளியிடவில்லை. அது ஒரு சமூக போராட்டம் என்பதை செய்திகள் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டன. நாடோடிகளும், தீண்டத்தகாதவர்களாக கருதப்படுபவர்களும் காமக் களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பெருமாள் முருகன் அவர் எழுத்து மூலம் சொல்லியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு குடும்பம் அல்லது சமூகத்தின் கவுரவம் பெண்ணிடமே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாம் ஒன்றும் ஆங்கிலோ - சேக்சன் சமூகத்தில் வாழவில்லை. நாம் வாழும் சமூக்கத்துக்கென சில மதிப்பீடுகள் இருக்கின்றன. அவை அரசியல் சாசனத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது முற்போக்கு சிந்தனைகள் மக்களின் உள் உணர்வைச் சுடுவதாக இருந்தால் அது நிச்சயம் நீடிக்காது. மக்கள் உணர்வுகளை விலையாகக் கொடுத்து முற்போக்குச் சிந்தனைகளை வளர்த்தெடுக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால் மக்கள் உள் உணர்வுகளைக் காயப்படுத்தியது தவிர இந்தப் புத்தகம் வேறு எதையும் செய்யவில்லை. மாறாக நம்பிக்கைகளை சிறுமைப்படுத்துவதை மட்டுமே இப்புத்தகம் செய்துள்ளது.
பெண்மையையும், ஆண்மையையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் இந்த புத்தகம் சரியாகக் கையாண்டுள்ளது. ஆனால், அதற்காக பெருமாள் முருகன் எதற்காக ஒரு காமக் களியாட்டத்தை புனைய வேண்டும். அதன் பின்புலமாக ஒரு குறிப்பிட்ட இடத்தையும், சமூகத்தையும், அவர்கள் சார்ந்த ஒரு சடங்கையும் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவேளை அவரும் அச்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இருக்கலாம் அல்லவா?
அப்படியென்றால் அந்தப் புத்தகத்தை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவையும் அந்த சமூகத்திடமே விட்டுவிடுங்கள். ஒருவர் தான் சார்ந்த சமூகத்தை சிறுமைப்படுத்த முழு உரிமை கொண்டவரா என்ன? இப்படித்தான் நீதிமன்றம் இச்சர்ச்சையை பார்க்கிறதா? இந்தப் புனைவு நாவல் எவ்வித சமூக தேவையையும் தீர்க்கவில்லை. புதினம் எழுதும்போதுதான் அதீத கவனம் தேவைப்படுகிறது. அவதூறுக்கு எதிராக தரவுகளை முன்வைக்கலாம், புனைவை வைக்க முடியாது.
உங்களது பார்வை நடுவுநிலையில் இல்லை என சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணருக்கும் - கோபியருக்கும் இடையேயான் உறவு, பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்குமான உறவு எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் மாதொருபாகனை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? பாகவதத்துக்கு ஒரு சமூகம் தடை கோரினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
பாகவதம் வரலாறாக பார்க்கப்படாதவரை பிரச்சைனையில்லை.
எப்படிச் சொல்கிறீர்கள்?
பாகவதம் இப்போது புராண அந்தஸ்தில் இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தின் சந்ததிகள் இல்லை. மக்கள் அந்த சமூகத்தினுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு மூதாதையர்கள் இருக்கிறார்கள் என உரிமை கொண்டாடாத வரையில் சிக்கல் இல்லை.
ஆனால் யாதவர்கள் அவ்வாறு கூறுகிறார்களே..
ஆமாம், யாதவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு கூறிக் கொள்வதை நிரூபிக்க அவர்களை அனைவரும் ஓரிடத்திலா வாழ்கிறார்கள். கிருஷ்ணர் - கோபியர் உறவை யாரும் ஒழுக்கக்கேடானது என விமர்சிக்கவில்லை.
இதை ஒழுக்கமற்றது என்று என்னால் பொருள்படுத்த முடியும்..
ஆம். ஆனால் அதற்கு இங்கு கிருஷ்ணர் வேண்டும். மனிதனுக்கு - இறைவனுக்குமான பந்தத்தை ஆண் - பெண் உறவுடன் சமன் செய்ய முடியாது. ஆனால், இதைத்தான மாதொருபாகன் செய்திருக்கிறது. சாமிப் பிள்ளை எனக் கூறுகிறது. அதாவது உறவு கொள்ளுபவர் மனிதன் அல்ல தெய்வமே எனக் கூற முற்படுகிறது. அதேவேளையில் அந்த உறவில் கடவுளாக யாரும் காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே பெண்களின் மாண்பு சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. அது சாமிப் பிள்ளை அல்ல யாரோ ஒருவருடைய குழந்தை. கடவுள் வேறு ஒரு நிலையில் இருக்கிறார். கடவுளை நாம் விமர்சிக்கலாம். சீதாவை வனவாசத்துக்கு அனுப்பியதற்காகவும், வாலியைக் கொன்றதற்காகவும் ராமரை நாம் சாடுவதில்லையா? ஆனால், ராமர் ஒரு கடவுள். இந்தியாவில் மட்டும்தான் கடவுளை விமர்சிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதினத்தில் யாரும் புனிதப்படுத்தப்படவில்லை. மக்கள் சில சமரசங்களை புனிதத்தன்மை கருதி ஏற்றுக்கொள்வர். ஆனால், ஒரு நாடோடியை எப்படி கிருஷ்ணருடன் ஒப்பிடுவீர்கள்.
அப்படியென்றால் ஒரு தனிநபர் கடவுளுக்கு சமமாக தூக்கி நிறுத்தப்பட்டால் இத்தகைய செயல்கள் நியாயப்படுத்தப்படுமா?
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர். மனிதன் உணர்வுகளால் ஆனவன். உங்கள் வாழ்வில் எவ்வளவு அத்தியாயங்களை நீங்கள் அறிவுசார்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பீர்கள்.
முந்தைய காலத்திலேயே சமூகத்தில் புதிய சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக நீதிமன்றம் கூறுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீதிமன்றங்கள் சுதந்திரமானதாக இருக்கின்றனவா? நெருக்கடி கால கட்டத்தில் ஜபல்பூர் வழக்கில் நீங்கள் சொல்லும் சுதந்திரம் எங்கே போனது. நெருக்கடி நிலவரத்தின்போது யாரும் ஹீபஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எப்போதெல்லாம் நீதிமன்றங்கள் தாராள சிந்தையுடன் செயல்பட வேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை அவ்வாறாகவே நடந்து கொண்டிருக்கின்றனவா?
ஒரு குற்றத்தை எதுவரை அனுமதிக்கலாம்.. எப்போது அனுமதிக்கக்கூடாது?
உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு தேசத்தில் ஒருவொருக்கொருவர் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொண்டுள்ளனர். இந்த பரஸ்பர மரியாதையின் காரணமாகவே நாட்டில் அமைதி நிலவுகிறது. அதேவேளையில் ஒருவரது நம்பிக்கை மற்றொருவரின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக அமைந்தால் அப்போது அரசோ அல்லது நீதிமன்றமோ தலையிட வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு போதிய தெளிவுடன் வழங்கப்பட்டவில்லை என்றே நான் உணர்கிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago