படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை முதல் மாணவராக உருவாக்குங்கள்: ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை முதல் மாணவராக உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்கலைக்கழக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டு மையம் சார்பில் சிறந்த பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி விருது வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமை தாங்கினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு விருதுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினார். ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. கே.பி.ஜெயா, கே.பழனிவேலு (இருவரும் சிவில்), ஜெ.பிரகாஷ் (எலெக்ட்ரிக்கல்), எஸ்.கலைச்செல்வன் (மெக்கானிக்கல்), எஸ்.ஆனந்தகுமார், எம்.விஸ்வநாதன் (இருவரும் கலை அறிவியல் பிரிவு) ஆகிய 6 பேராசிரியர்களும் ஆராய்ச்சி விருதுகளை பெற்றுக்கொண்டனர். விழாவில், அப்துல் கலாம் பேசியதாவது:

ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன். ராமேஸ்வரத்தில் ஆரம்பக் கல்வி படித்தபோது, ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் பறவை பறக்கும் விதத்தை படம் வரைந்து விளக்கிக் கூறினார்.

பள்ளியில் நடந்த அந்த சம்பவமே பின்னாளில் நான் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்கச் செய்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆசிரியர்கள் வெறுமனே பாடங்களை நடத்துவது மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

ஆசிரியர்கள் உறுதிமொழி

அதைத் தொடர்ந்து, ஆசிரியர் பணி தொடர்பான 11 உறுதிமொழிகளை கலாம் வாசிக்க, விழாவில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும் திரும்பச் சொல்லி உறுதியேற்றனர்.

முன்னதாக, பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயன்பாட்டு மைய இயக்குநர் எஸ்.கண்மணி வரவேற்றார். துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE