வஞ்சிக்கப்படும் 2.5 லட்சம் ஜி.டி.எஸ் அஞ்சல் ஊழியர்கள்: செவிசாய்க்காத மத்திய அரசு - உங்கள் குரலில் புகார்

இந்திய அஞ்சல் துறையின் முதுகெலும்பாக உள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்களின் (Gramin Dak Sevaks) கோரிக்கைகள் ஆண்டுக் கணக்கில் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதால் அவர்கள் வேதனையில் தவித்து வருகின்றனர்.

இது குறித்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சிலர் கூறும்போது: ‘இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுக்க சில ஆயிரம் பேர் மட்டுமே துறையின் பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் ஜி.டி.எஸ் என்று அழைக்கப்படும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்தான். ஜி.டி.எஸ் ஊழியர்கள்தான் இந்திய அஞ்சல் துறையின் முதுகெலும்பு. ஜி.டி.எஸ் அந்தஸ்தில் கிளை அஞ்சல் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), ஜிடிஎஸ் போஸ்ட் மேன், மெயில் பேக்கர், மெயில் கேரியர் மற்றும் ஸ்டாம்ப் விற்பனையாளர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் அஞ்சல் அதிகாரி மட்டத்தில் உள்ளவர்களே குறைந்தபட்சமாக 2,745 ரூபாயும், அதிகபட்சமாக 4,575 ரூபாயும்தான் ஊதியமாக பெறுகின்றனர்.

மற்றபடி இஎஸ்ஐ, பிஎப், விடுப்பு, பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை 45 ரூபாய் முதல் 75 ரூபாய் வரைதான் ஊதிய உயர்வு வழங்குவர். அதிலும் 6-வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வரும் முன்பு வரை குறைந்தபட்சமாக ரூ.2,500 முதல் ரூ.3,200 வரைதான் ஊதியம் பெற்று வந்தனர்.

பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் 1977-ல் ‘அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்’ இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றது. உச்ச நீதிமன்றம், ‘ஜி.டி.எஸ் ஊழியர்களும் அரசு ஊழியர்களே. அவர்களுக்கும் அரசு ஊதிய சலுகைகள் அனைத்தும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்தது. ஆனால் அஞ்சல் துறை நிர்வாகம் அதை ஏற்கவில்லை.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பிறகு 1996-ல் மீண்டும் இதே விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது முந்தைய தீர்ப்பை அமல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதும் அதிகாரிகள் அதை அமல்படுத்த முன்வரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட தல்வார் கமிட்டி, ஜி.டி.எஸ் ஊழியர்களை இலாகா ஊழியர்களாக ஆக்குவது, பென்ஷன், போனஸ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு தனக்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை காரணமாகக் கூறி இன்று வரை அந்த பரிந்துரையை அலட்சியப்படுத்தி வருகிறது.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தால், அதைத் தடுக்க அரசு சார்பில் இயங்கும் தொழிலாளர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். எங்களிடம் அரசே உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஜி.டி.எஸ் ஊழியர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 4 முதல் 5 மணி நேரம்தான் பணியாற்றுகிறோம். இருப்பினும் மீதமுள்ள நேரத்தில் எந்தவொரு நிலையான பணியையும் தேடிக்கொள்ள முடியாது.

இதுதவிர அஞ்சல் துறையின் நிரந்தர பணியாளர்கள் தங்களின் பணிகளை எங்கள் மீது சுமத்தி செலவில்லாமலே இலகுவாக்கிக் கொள்கின்றனர். இவற்றில் இருந்து விடுபட்டு நாங்களும் ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள தற்போது மத்தியில் அமைந்துள்ள புதிய அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உயர் அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் அதிகாரியான டி.மூர்த்தியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, “ஜி.டி.எஸ் ஊழியர்கள் பிரச்சினை பற்றி இந்திய அஞ்சல்துறையின் தலைமை நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும்.

இது சம்பந்தமாக வட்ட தலைமை அஞ்சலக அதிகாரிகளின்அதிகார வரம்பிற்குள் எதுவும் பேச இயலாது” என்று பதில் வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE