கல்லூரிகளில் காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி தலைப்பில் போட்டி: திமுக மாணவர் அணி எதிர்ப்பு

'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' தலைப்பில் கல்லூரிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துவது கண்டனத்துக்குரியது என்று திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது.

திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:

கல்லூரி கல்வி இயக்குனர், சென்னை மண்டலம், 27.8.2014 அன்று சென்னை மண்டல அரசுக் கல்லூரிகள், உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரி முதல்வர், செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்ணல் காந்தியடிகளின் 146வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி நடத்த வேண்டும் என்றும், கல்லூரிக் கல்வி இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மற்றும் இணைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் எடுத்த முடிவின்படி, 'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' என்ற தலைப்பில் நடத்திட அறுவுறுத்தியல்ல, ஆணையாகவே உள்ளது.

ஜெயலலிதா புகழ்பாட உத்தமர் காந்திதானா கிடைத்தார்? ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்; தினசரி காலையில் கோட்டைக்கு வசூல் விபரத்தைச் சொல்ல வேண்டும் என ஜெயலலிதா அரசில் நடத்தப்படும் மதுபான விற்பனை சதவீத உயர்வு என்ற ஜெயலலிதாவின் சாதனைப் பட்டியலை அகிம்சாமூர்த்தி பிறந்த நாளில் அர்ப்பணிப்பார்களா?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல், விலைவாசியைப் போலவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவிகள் பாலியல் வன்முறைக்கு இரையாகியுள்ளனர். இதுதான் உத்தமர் காந்தி கண்ட கனவா?

ஜெயலலிதா ஆட்சியில் இருளில் மூழ்கிடும் தமிழகத்தில் ஆசிரியர், ஆசிரியைகள் போராட்டம் - பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் பெரும் பிரச்சனைகள், வழக்குகள் - இந்த சாதனைகள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வருமா? கட்டுரைப் போட்டியில் வருமா?

உத்தமர் காந்தியார் பிறந்த நாளில் அவரை அவமதிக்கும் வண்ணம் ஜெயலலிதாவின் புகழ்பாட கட்டுரை, பேச்சு போட்டிகள் அறிவித்துள்ள தமிழ்நாடு கல்வித்துறையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE