திமுகவில் தங்கதமிழ்ச்செல்வன்: செந்தில்பாலாஜி பாணி கைகொடுக்குமா?

By என்.கணேஷ்ராஜ்

அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அவர் பாணியை பின்பற்றி திமுகவில் இணைந்துள்ளார்.

ஆனால் செந்தில்பாலாஜி அளவிற்கு தங்கதமிழ்ச்செல்வனுக்கு திமுக இணைவு கைகொடுக்குமா? என்ற வாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்திருக்கின்றன.

இந்த அலசலுக்குள் செல்வதற்கு முன்னதாக செந்தில்பாலாஜி குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்.

செந்தில்பாலாஜி ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான். 2000-ம் ஆண்டுதான் அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் செயல்பாடு தலைமைக்குப் பிடித்துப்போனதால் மாணவரணி, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 2006-ல் கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திமுக.வை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி இத்தொகுதியில் அதிமுகவை வலுவாக ஊன்றச் செய்தார்.

2011-ம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதும் இவருக்கு ஜெயலலிதா போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கினார்.

அதிமுகவில் உச்சம் தொட்ட அவருக்கு அங்கு சற்று சரிவு ஏற்படத் துவங்கியது. 2015-ல் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்ததுடன் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததால் அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். இருப்பினும் ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தினகரன் பக்கம் சென்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அங்கு கரூர் மாவட்டச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார். இருப்பினும் நீண்டநாள் அங்கு அவரால் தொடர முடியவில்லை. அப்புறம் அவர் தனது தாய்க்கழகமான திமுகவுக்கே திரும்பினார்.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திமுக, அதிமுக, அமமுக என்று கட்சிகள் மாறினாலும் இவரது தனிப்பட்ட செல்வாக்கு இவருக்கு பக்கபலமாகவே இருந்தது.

ஆனால் தங்கதமிழ்ச்செல்வனைப் பொறுத்தளவில் ஆரம்பத்தில் இருந்து அதிமுகவையே முழுமையாகச் சார்ந்து அரசியல் நடத்தி வந்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னுறுத்தியே இவரின் அரசியல் செயல்பாடுகளும் இருந்துள்ளன. அதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். 2001-ல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் ஜெயலலிதா போட்டியிட்டு முதல்வராக வேண்டும் என்பதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இத்தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார். இந்த விசுவாசத்திற்காக கட்சி இவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கியது.

கட்சிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவருக்கு 2011, 2016 தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ வாக இருந்தார்.

இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரின் மோதல் போக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளைப் பெற முடியாத நிலை உருவானது. பொது இடங்களில் இவரின் பேச்சும், நடவடிக்கையும் இவர் மீதான அதிருப்தியையே ஏற்படுத்தியது.

இதனால் ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அமமுகவிற்குச் சென்றார். அங்கு அவருக்கு தேனி மாவட்டச் செயலாளர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டன.

தினகரனிற்கு அடுத்த நிலையில் இருந்த இவருக்கு சின்னத்தை மீட்பதில் சிக்கல், சமீபத்திய தேர்தலில் தோல்வி உள்ளிட்டவை மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

நினைத்தபடி அதிமுக ஆட்சியையும் கலைக்க முடியவில்லை. இருந்த எம்எல்ஏ பதவியும் பறிபோனது என்று தொடர்ந்து மனக்குமுறலில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது திமுகவிற்கு மாறியுள்ளார். ஆனால் செந்தில்பாலாஜி அளவிற்கு இந்த கட்சி மாற்றம் இவருக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை செந்தில்பாலாஜி தக்கவைத்திருந்தார். எந்த கட்சிக்கு சென்றாலும் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு தொகுதி அவர் வசம் இருந்தது.

 ஆனால் தங்கதமிழ்ச்செல்வனைப் பொறுத்தளவில் ஆரம்பத்தில் இருந்து அதிமுக பலத்தின் பின்னணியிலே இவர் இயங்கி வந்தார். அதனால் இரட்டை இலை என்ற சின்னத்தைக் கடந்து இவரால் தனிப்பட்ட செல்வாக்கை இங்கு நிலைநிறுத்த முடியவில்லை.

போதாகுறைக்கு இவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சும், செயல்பாடும் பல நேரங்களில் இவருக்கு எதிராகவே திரும்பி உள்ளன. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தும் இந்த குணநலன்களால் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் என்று தொடர்ந்து பலரிடத்திலும் தொடர்ந்து நட்பு பாராட்ட முடியவில்லை.

தற்போது திமுக.வுடன் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தேனி மாவட்டத்தில் அரசியல் செய்யக்கூடியவர் என்ற ரீதியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இருப்பினும் திமுகவில் இணைந்தது தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்