கொதிக்கிறது ஊட்டி

By ஆர்.டி.சிவசங்கர்

தகிக்கும் வெயிலில் இருந்து தப்ப,  குளு குளுவென இருக்கும் உதகைக்குச் செல்லலாம் என சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு அணிவகுத்து வருகின்றனர். ஆனால், காலநிலை மாற்றங்களால் கடந்த சில ஆண்டுகளாக `ஊட்டி’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதகையே கொதிக்கும் அளவுக்கு சூடாகத் தொடங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமான நீலகிரி, உயிர்ச் சூழல் மண்டலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில், 3,300 வகை பூக்கும் தாவரங்கள், 100 வகை பாலூட்டிகள், 350 வகை பறவைகள், 80 வகை ஊர்வன இனங்கள், 334 வகை வண்ணத்துப் பூச்சிகள், 39 வகை மீன்கள், 1,232 வகை தாவரங்கள் உள்ளன.

மேலும், கொள்ளை கொள்ளும் இயற்கை எழிலால் சர்வதேச சுற்றுலா நகராகவும் திகழ்கிறது.ஊட்டி என்றதுமே ஜில்லென்ற காற்றும், பனியும்தான் பலரது எண்ணங்களில் பரவியுள்ளது.

இதனால், கோடை விடுமுறை விட்டதுமே பல்லாயிரக்கணக்கானோர்  ஊட்டிக்கு சுற்றுலா கிளம்பிவிடுகின்றனர். இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, 30 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையும்  ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குளு குளு நகரமான ஊட்டியிலேயே கடும் வெயில் சுட்டெரிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். குளிர் சூழல் மாறி, சமவெளிப் பகுதியைப்போல ஊட்டி தகிக்கிறது. நடப்பாண்டு கோடை முடிந்த பின்னர் இன்னமும் வெயில் கொளுத்துகிறது.

வழக்கமாக ஊட்டியில் ஜூன், ஜூலை மாதங்களில்  ஓயாத மழையும், காற்றும் இருக்கும். வெளியில் சென்று வந்தால், குளிர் எலும்புகள்வரை ஊடுருவும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம்,  கோடைகாலம்போலவே இருக்கிறது. சம்பிரதாயத்துக்குக்கூட மழை  பெய்யவில்லை. வழக்கமாக குளிரைத் தாக்கும் ஆடைகளை அணியும் பொதுமக்கள், தற்போது இரவில்கூட வெறும் சட்டையுடன் உலவுகின்றனர்.

ஊட்டியின் தொன்மையான இயற்கைத் தன்மை மாறிவிட்டது. தவறான பருவ நிலையால் ஊட்டி சமவெளிப் பகுதிபோல மாறிவருகிறது. பல நீர்நிலைகள் வறண்டு, பாலைவனம்போல காட்சியளிக்கின்றன. கோடைவாசஸ்தலமான ஊட்டி, வெறும் சுற்றுலா நகரமாக மாறி விட்டது.

பருவ நிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், காடு அழிப்பு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் ஊட்டியின் தட்பவெப்ப நிலை மாறி, தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது என்கின்றனர் ஊட்டியில் உள்ள மத்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் எஸ்.மணிவண்ணன், கஸ்தூரி திலகம் ஆகியோர்.

இவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில்  காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களது ஆய்வில், ஊட்டியின் வெட்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் கூறும்போது, “1958-ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும்போது, கடந்த 30 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை பெரிதும் அதிகரித்துள்ளது.

 1960 முதல் 1989 வரை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் 2 முறை மட்டுமே பதிவாகியது. ஆனால், 1991 முதல் 2018 வரை 15 முறை,  20 டிகிரி செல்சியஸுக்குமேல் வெப்பநிலை ஊட்டியில் பதிவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதேநிலை நீடித்தால், கடும் வறட்சி அல்லது அதிக மழை  ஏற்படும் அபாயம் உள்ளது.

நடப்பாண்டு தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை மழை தொடங்காதது கவலையளிக்கிறது. இதற்கு, காலநிலை மாற்றமே முக்கியக் காரணம்” என்றார்.

காலநிலை மாற்றம் பேரிடருக்கும்கூட வித்திடும் என்று கவலை தெரிவிக்கிறார் சூழலியலாளர் சு.மனோகரன். “நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு, தாவர வளர்ச்சி மற்றும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். சூழலுக்குப் பயனற்ற தாவரங்கள் அதிக அளவில் பெருகி, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். விளை நிலங்கள் குறையும். இதனால் விவசாயம், நீர் நிலைகள் பாதிக்கப்படும். நீரோட்டம் தடைபட்டு பேரிடர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு கேரளாவில் பெரும் மழை பெய்தது.

 கேரள மாநிலமே வெள்ளத்தால் மூழ்கியது. அதன் பின்னர் கடும் வறட்சி ஏற்பட்டது. கேரளா எப்படியோ பேரிடரிலிருந்து விரைவில் மீண்டது. ஆனால், தமிழகம், குறிப்பாக நீலகிரி மாவட்டம் அத்தகைய பேரிடரை எதிர்கொள்ளத்  தயாராக இல்லை.

கடந்த 2009-ல் ஏற்பட்ட பேரிடரால்,  ஊட்டி பிற மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்று தினங்கள் நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழையில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர்  பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 43 பேர் பலியாகினர். அதற்குப்  பின்னர் நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, பருவ மழை பொய்த்து வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்துவிடும் என்றே தெரிகிறது.

பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்இருப்பு 30 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ள நிலையில், தென்மேற்குப்  பருவ மழை பொய்த்துவிட்டால், மின் உற்பத்தி மட்டுமின்றி தென்னகத்தின் தண்ணீர்த்  தொட்டியான நீலகிரி மாவட்டத்தில்,  குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்