‘இரண்டு ஆண்டுகளாக நிம்மதியின்றி தவித்தோம். இப்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பால் என் மீதான அவப் பெயர் நீங்கிவிட்டது’ என்று ஜெமினி மேம்பால பஸ் விபத்தால் பணியிழந்த மாநகர போக்குவரத்துக் கழக டிரைவர் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்றுகொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ் (தடம் எண் 17எம்), அண்ணா மேம்பாலத்தின் சாய்தளப் பாதையில் திரும்பியபோது, வலதுபுற சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. இதில் 46 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
டிரைவர் பிரசாத், அலட்சியமாகவும் வேகமாகவும் பஸ்ஸை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூறியது. செல்போனில் பேசியபடியே வண்டியை ஓட்டினார் என சிலர் குற்றம்சாட்டினர். ஆனால், டிரைவர் பிரசாத்தோ, ‘டிரைவர் சீட் திடீரென உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானது’ என தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அந்த உத்தரவுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, தொழிலாளர் தனி துணை ஆணையரிடம் மாநகர போக்குவரகத்துக் கழகம் மனு தாக்கல் செய்தது. அதற்கு பதிலளித்து பிரசாத் தாக்கல் செய்த மனுவில், ‘விபத்து நிகழ்ந்த பஸ்ஸின் பராமரிப்பு சரியில்லை. ஓட்டுநர் இருக்கை உடைந்து கம்பி மற்றும் வயரால் கட்டப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இரு தரப்பிலும் விசாரணை நடத்திய துணை ஆணையர், “விசாரணைக்கு முன்பே டிரைவரை குற்றவாளி என்று நிர்வாகம் தீர்மானித்துவிட்டது. அவர் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் புகாருக்கு போதிய சாட்சிகளையும் மாநகர போக்குவரத்துக் கழகம் ஆஜர்படுத்தத் தவறிவிட்டது” என்று கூறி, டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழக்கு தொடர்ந்தது. டிரைவர் பிரசாத்துக்கு ஆதரவாக நேதாஜி தொழிற்சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன், ‘டிரைவர் பிரசாத்துக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவரிடம் குறுக்கு விசாரணை நடக்கவில்லை’ என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பினால் டிரைவர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிரசாத் (50) கூறும்போது, ‘‘எனது அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்தது என்று நிர்வாகம் கூறியதால் என்னைப் பற்றி அக்கம்பக்கத்தினர் மட்டுமின்றி, மாநிலமே தவறாக நினைத்தது. அதன்பிறகு வேலையும் பறிபோனது. அந்த கவலையில் தூக்கமிழந்து, இதயநோயாளியாக ஆனேன். இப்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பால் பெரும் மனநிம்மதி ஏற்பட்டுள்ளது. மனதில் இருந்து பெரிய சுமை இறங்கியதைப்போல் உணர்கிறேன்” என்றார்.
டிரைவரின் மனைவி பேட்டி
பிரசாத்தின் மனைவி மெர்ஸி (45) கூறியதாவது:
குடும்பத்தையே மறந்து வேலையில் கவனமாக இருந்தவர் என் கணவர். வேலை பறிபோன இந்த இரண்டாண்டு காலத்தில்தான் குடும்பத்தைப் பற்றியே அவர் நினைத்திருக்கிறார். அப்படிப்பட்டவரை, பணியில் அலட்சியமாக இருந்தார் என்று கூறினர். இந்த அவச்சொல்லால் நிம்மதி இழந்து தவித்தோம். வேலை பறிபோனதால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டோம். தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் எனது சொற்ப வருமானத்தை வைத்து, குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. கல்லூரி படிக்கும் மகன்களின் கல்விச் செலவு, கணவரின் மருத்துவச் செலவு என கடனாளியாகிவிட்டோம். துவண்டுபோயிருந்த எங்கள் வாழ்வில், இந்தத் தீர்ப்பு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது. என் கணவருக்கு அரசு மீண்டும் வேலை அளித்து, எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இவ்வாறு மெர்ஸி கண்ணீர் மல்க கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago