இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப் பட்டுவாடா: பூத் கமிட்டிக்கு அதிமுக தலா ரூ.10 ஆயிரம் வழங்கியது

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அதிமுகவினர் நேற்று பணப் பட்டுவாடாவை தொடங்கினர். முதற்கட்டமாக பகுதிச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் ஒரு பூத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கொடுத்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதால் திமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி களுக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் அதிமுக, திமுக, அமமுக மற்றும் பாஜக கட்சியினர் 2 தொகுதிகளிலும் பணிகளைத் தொடங்கிவிட்டனர். இவர்கள் போட்டிபோட்டு தங்கள் கட்சிகளின் சின்னங்களைச் சுவர்களில் வரைந்து வருகின்றனர்.

இதில், அதிமுக, அமமுகவினர் மற்ற கட்சிகளை முந்திக் கொண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, ஆலோசனைக் கூட்டம், தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், திமுக, பாஜக கட்சியினரோ தற்போதைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்ற மனநிலையில் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். அதிமுகவினர், அமமுகவினருடைய தேர்தல் பணிகளைப் பார்த்து, தற்போது அவர்களும் இடைத்தேர்தல் பணிகளில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றத்தில் புறநகர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோ சனைக் கூட்டம், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான விவி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், ‘‘விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது நமக்கு கட்டாயம், தேர்தல் பணி களை இப்போதிருந்தே ஆரம்பியுங்கள்’’ என உத்தரவிட்டனர்.

கூட்டம் முடிந்ததும் பூத்துக்கு தலா ரூ.10 ஆயிரமும், பகுதிச் செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் விநியோகம் செய்து ‘கவனிப்பு’ பணியைத் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: ‘‘தொகுதி முழுவதும் வார்டு வாரியாக பூத் கமிட்டி கூட்டம் நடத்த இருக்கிறோம். முதற்கட்டமாக நேற்று 95 மற்றும் 96-வது வார்டுகளில் உள்ள 29 பூத் கமிட்டிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 580 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒரு பூத் கமிட்டிக்கு ரூ.10 ஆயிரம், பகுதிச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம், மற்ற அணி நிர்வாகிகளுக்கு ரூ.10 ஆயிரம் என முதற் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் போல் இங்கே கோட்டைவிட மாட்டோம். திருப்பரங்குன்றம் அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதி. எளிதில் யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்’’ என்றனர்.

இடைத்தேர்தல் என்றாலே ‘கவனிப்பு’களும், ‘பரிசு’களுமாக திருவிழாபோல் நடக்கும். தற்போது அதிமுக, திமுக மற்றும் அமமுக ஆகிய 3 கட்சிகளுக்குமே இந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றால் அதிமுக கட்சித் தொண்டர்கள் முழுவதும் முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பக்கம் இருப்பதாகக் கருதப்படும்.

திமுக வெற்றிபெற்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மக்களவைத் தேர்தலை உற்சாகமாக சந்திக்கவும், அடுத்து நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து, ஆட்சியைப் பிடிக்கவும் அக்கட்சிக்கு உதவியாக அமையும். திமுகவினர் சிலர் கூறும்போது, "அழகிரிக்கு இங்கு குறிப்பிடும்படியான ஆதரவு இல்லை. சிலர் மட்டுமே அழகிரி செல்வாக்கை ஊதி பெரிதாக்குகிறார்கள். திமுக வெற்றி பெற்றால் இதற்கும் முடிவு கட்டி விடுவோம்’’ என்றனர்.

அமமுக வெற்றிபெற்றால் அதிமுகவை தினகரன் தரப்பு முழுமையாகக் கைப்பற்றும் என்று அமமுகவினர் நினைக்கின்றனர்.அதிமுக, திமுக மற்றும் அமமுக ஆகிய 3 கட்சிகளுக்குமே இந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்