வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்று கார் பந்தயம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், ரஜினி கிருஷ்ணன் உட்பட இந்திய மோட்டார் விளையாட்டு உலகுக்கு, தமிழகம் தந்துள்ள பொக்கிஷங்கள் ஏராளம். இவர்களுக்கான உத்வேகத்தையும், முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர்களில் கரிவரதன், சுந்தரம், சந்தோக் என பலரைச் சொல்லலாம். குறிப்பாக, `இந்திய கார் பந்தய பிதாமகன்’ என்று போற்றப்படுகிறார் கரிவரதன்.
தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் நடைபெறும் முதல்தர மோட்டார் பந்தயங்களில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மோட்டார் பந்தய உலகில் தமிழகம் கொடிகட்டிப் பறப்பதற்கு முன்னோடியாய் திகழ்ந்தவர்களில் ஒருவர் கரிவரதன்.
தமிழகத்தின் மோட்டார் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும், வாகனத் துறைக்கும் பெரிதும் பங்களிப்பை வழங்கி வருவது கோவை மாநகரம். 1960-களில் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் அனுமதி பெற்று மோட்டார் பந்தயங்கள் நடத்தப்பட்டன. கோவையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கியவர் கரிவரதன்.
பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது கோவை மாவட்டம். குறிப்பாக, மோட்டார் விளையாட்டுகளின் தலைநகரமாகவே கோவை மாறி வருகிறது. கோவைக்கு இந்த அளவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க முக்கியக் காரணம் ‘கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே’ பந்தய மைதானம்தான். இங்கு, மோட்டார் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, உலகத் தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களது மோட்டார் பந்தய திறனைப் பரிசோதிக்கும் களமாகவும் இது திகழ்கிறது. இந்தப் பந்தய மைதானமே கரிவரதன் பெயரில்தான் அமைந்திருக்கிறது.
கோவையில் பிரசித்தி பெற்ற லஷ்மி மில்ஸ் டெக்ஸ்டைல்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜி.கே.சுந்தரத்தின் மகன் கரிவரதன் 1954 ஜூன் 20-ம் தேதி பிறந்த இவர், ` ஃபார்முலா மாருதி ஒபன் வீல் கார்’களை வடிவமைத்து, இந்திய கார் பந்தய வீரர்களுக்கு உதவினார். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மன் இப்ராஹிம் உள்ளிட்டோர் இவரால் ஊக்குவிக்கப்பட்டு, சர்வதேச கார் பந்தய வீரர்களாக மாறினர்.
கனடா நாட்டில் உள்ள ஜிம் ரூசல் ரேஸிங் பள்ளியில் கார் பந்தய விளையாட்டை கற்றுக் கொண்ட இவர், பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று, வெற்றி வாகை சூடினார். சென்னை சோழவரம், கொல்கத்தா பராக்பூரில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் பங்கேற்றார்.
1973-ல் சென்னை சோழவரத்தில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்ற இவர், பத்மினி, டாட்சன், பார்முலா அட்லாண்டிக் கார்களை பந்தயத்துக்குப் பயன்படுத்தினார். இவர் பந்தயத்துக்குப் பயன்படுத்திய பெரும்பாலான கார்கள், இவராலேயே வடிவமைக்கப்பட்டன. 1992-ல்
ஜே.கே.ரேலி அணியை உருவாக்கினார். இவர் கட்டமைத்த பந்தய அணி `சூப்பர் ஸ்பீட்ஸ்’ என்று அழைக்கப்பட்டது.
கார் பந்தயத்தில் மட்டுமின்றி, விமானத் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த கரிவரதன் குடும்பத்துக்குச் சொந்தமாக செஸ்னா ரக விமானம் இருந்தது. விமானத்தைபோல, பறக்கும் கிளைடர்களை, பைக் இன்ஜின் கொண்டு உருவாக்கினார்.
இந்த கிளைடர்களை கொண்டு, உதகை, திண்டுக்கல் கோவில்பட்டி பகுதியில் உள்ள மலைகள் மீது பறப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கிளைடர்களைப் பரிசோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட விமான ஓடுதளம்தான், பிற்காலத்தில் கரிவரதன் மோட்டார்ஸ் ஸ்பீடுவே-யாக மாறியது.
மிகத் திறமையான பொறியாளரான இவர், 1995-ல் அவரது 41-வது வயதில் துரதிருஷ்டவசமாக ஒரு விமான விபத்தில் பலியானார். அவர் மறைந்து 24 ஆண்டுகளானாலும், அவரது புகழ், இளம் கார் மற்றும் பைக் பந்தய வீரர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கிறது.
கரிவரதன் சிறந்த ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் மட்டுமின்றி, மிகச் சிறந்த பந்தயக் கார்களை உருவாக்கும் திறன் படைத்த பொறியாளரும்கூட. பந்தயங்களில் பங்கேற்கும்போது அவர் விரும்பி ஏற்கும் எண்65.
மோட்டார்ஸ் விளையாட்டின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்த இவர், கோவையைச் சேர்ந்த பல வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளார். கோவை மட்டுமின்றி, நாடு முழுவதும் கார் பந்தயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, சாகசங்கள் நிறைந்த இந்த விளையாட்டில் அதிக வீரர்கள் பங்கேற்க உத்வேகம் அளித்தவர் கரிவரதன்.
அவரது 65-வது பிறந்த நாளையொட்டி கோவையில் உள்ள ஜி.டி. கார் கண்காட்சி அரங்கில், சிறப்பு கார்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
“இந்தக் கண்காட்சியில், கரிவரதன் வடிவமைத்த 5 கார்கள் மட்டுமின்றி, வேறு இரு பந்தயக் கார்களும் இடம்பெறுகின்றன. மேலும், கரிவரதன் தொடர்பான 200 புகைப்படங்கள், 1973 முதல் 1995 வரை பல்வேறு நாளிதழ்களில் கரிவரதன் தொடர்பாக வெளியான செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கரிவரதன் பிரத்யேகமாக வடிவமைத்த இரண்டு இருக்கைகள் மற்றும் ஒரு இருக்கை கொண்ட ‘ஃபார்முலா ஒன் கார்கள்’ நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இவர், பைக் இன்ஜினைக் கொண்டு `கோ கார்ட்’ வடிவமைத்தார். மேலும், ‘ஃபார்முலா ஃபோர்ட்’ இன்ஜினைக் கொண்டு டால்பின் காரை வடிவமைத்தார்.
இவற்றை கொண்டே பல்வேறு பந்தயங்களில் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கரிவரதன் தொடர்பான ஆவணப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கரிவரதனின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், இளைஞர்களுக்கு உதவும் மனப்பாங்கு, அவர் பங்கேற்ற பந்தயங்கள், அவரது கார் வடிவமைப்புத் திறன் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், பந்தயக் கார்களில் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளுக்கு அவர் எப்படி தீர்வுகண்டார் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது” என்கிறார் ஜி.டி.கார் அருங்காட்சியகத்தின் அறங்காவலர் ஜி.டி.ராஜ்குமார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago