நிர்வாக திறன் இன்மை, ஊழல் குற்றச்சாட்டுகளால் உதவி ஆணையர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளை பணியிடம் மாற்ற முடிவு: கோவை மாநகராட்சி ஆணையர் தகவல்

நிர்வாக திறன் இன்மை, ஊழல் குற்றச்சாட்டு, பணிகளில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால், உதவி ஆணையர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற, கட்டிட அனுமதி பெற, மனைகளுக்கு அனுமதி பெற, சொத்து வரி புத்தகம் பெற, விளம்பர பலகைகள் பொருத்த அனுமதி பெறுதல் ஆகிய தேவைகளுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த புகார்கள் அளிக்கவும் பொதுமக்கள் தினமும் மாநகராட்சி பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், மேற்கண்ட தேவைகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தால், அனுமதி வழங்குவதில் தாமதம் செய்யப்படுகிறது. மேலும், விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப, லஞ்சத் தொகையும் வசூலிக்கப்படுகிறது. மண்டல அலுவலகங்களில் உள்ளாட்சி சார்ந்த தெருவிளக்குகள் பழுது, சாலைகள் சீரமைக்க வேண்டும், சாக்கடைகளை தூர்வார வேண்டும். நடைபாதைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட புகார்களை தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பணி செய்வதில் அலட்சியம் காட்டும், ஆதாயம் பெறும் நோக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

வடக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் உட்பட 4 பேர் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

சிலர் ஒரே துறையில் நீண்ட நாட்களாக கோலோச்சி வருவதாகவும், நிர்வாக திறனற்ற சிலர் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. பொதுமக்களின் தொடர் புகார், நிர்வாகத் திறன் இன்மை, ஊழல் குற்றச்சாட்டு, பணிகளில் மந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் உதவி ஆணையர் முதல் கீழ் நிலை அதிகாரிகள் வரையிலானவர்களை பணியிட மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும் போது, ‘உதவி ஆணையர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முதல் கீழ் நிலை அதிகாரிகள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். நிர்வாக திறனில்லாமல் சில முக்கிய பொறுப்புகளில் உள்ள பெண்களும் மாற்றப்பட உள்ளனர். குப்பைக் கிடங்கு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிவோரும் பணியிட மாற்றம் செய்யப்படுவர்' என்றனர்.

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, ‘பணியிட மாற்றத்துக்கான ஆய்வு நடந்து வருகிறது. முதல்கட்டமாக உதவி ஆணையர்கள் மாற்றப்படு வர். அதைத்தொடர்ந்து, அனைத்து துறை மேல்நிலை முதல் கீழ் நிலை வரையுள்ள அதிகாரிகள் மாற்றப் படுவர். ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், மாநகராட்சி மண்டல அலுவலகத் தில் நடத்தப்படும். அதாவது, ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஒவ்வொரு மண்டலம் வாரியாக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும். எந்த மண்டலத்தில், எந்த தேதியில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும். அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியாகும்' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE