மகன் கோபத்துக்குக் காரணம் என்ன?- பாசப் போராட்டங்கள்: தமிழிசை உருக்கமான பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை பேட்டி அளித்தபோது அவரது மகன் சுகந்தன் கோபப்பட்டார். அதைக் கட்சிக்கு எதிரான கோஷம் என திரிக்கப்பட்டது. அதுகுறித்து தமிழிசை உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளிக்கும்போது அவரது மகன் சுகந்தன் ஆத்திரத்தில் ஏதோ சொல்ல, உடனிருந்த அவரை அறிந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மகனை சமாதானப்படுத்தும் நிலையில் பேட்டி அளிக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டிருந்தார் தமிழிசை.

அதன்பின்னர் சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக தமிழிசையின் மகனே கோஷமிட்டார் என செய்தி திரித்துப் பரப்பப்பட்டது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு:

“அன்பின் அன்பான வணக்கம். நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன்.

நேற்றைய தினம் மரியாதைக்குரிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால் நான் திருச்சி வரவில்லை. நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லி விட்டு அவர்களை அனுப்ப முயன்றேன்.

கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபம் அடைந்து கட்சி தான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார்.

இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்துக்குரியது. குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு அரசியல் தலைவராக இருக்கும்போது, குடும்பத்தை விட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் இவை.

ஏன், அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.அதை, சாதாரணமாக நடந்த ஒரு குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது, சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது மனதை ரணப்படுத்தினாலும், பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்கிறேன்.

அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள். எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தைக் குறைக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான். என் பணிகளும் பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சவால்களை எதிர் கொள்வதே வாழ்க்கை'' என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் இழக்கும் பல விஷயங்கள் உள்ளன. அது குடும்பத்தாருடன் செலவழிக்கும் நேரம்.

அரசியல் பணியினால் அப்படி நேரம் செலவழிக்க முடியவில்லையே என்பதை உறவுகள் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்ளும்போது அதையும் தாங்கிக்கொண்டு பணியாற்றும் தருணம்.

மற்றொன்று 24 மணி நேரத்தில் ஓய்வு, தூக்கம் என்பது இரண்டாம்பட்சமாகி உடல் நலன் பாதிப்பு, அரசியல் சூழலால் மன அழுத்தம் போன்ற பல இக்கட்டான விஷயங்களைச் சந்திக்கவேண்டி உள்ளது.

அதிலும் பெண் அரசியல்வாதிகள் நிலை இன்னும் சிரமம். வீட்டில் பிள்ளைகளுக்கு தாயின் அரவணைப்பு கட்டாயம் என்கிற நிலையில் அவர்களால் அதை தரமுடியாதபோதும், பெண்ணாக அரசியலில் மற்ற சவால்களுடன் எதிர் கொள்ளும்போதும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஏற்கெனவே ஒரு தலைவரின் மகளாக இதே சூழலை அனுபவித்தவர், தற்போது தானும் ஒரு அரசியல் தலைவராக  தன் பிள்ளைகளிடமும் அதே நிலையைத் தொடரும்போது இரண்டு நிலையையும் வாழ்க்கையில் அனுபவிக்கவேண்டிய ஒரு தலைவராக செயல்படும் நிலை உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE