பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? - தருமபுரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்ட அணைகள் பருவமழையால், நடப்பு ஆண்டிலாவது முழுமையாக நிரம்புமா என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்தில் கேசர்குளி அணை மற்றும் பஞ்சப்பள்ளி(சின்னாறு) அணை, பென்னாகரம் வட்டத்தில் நாகாவதி அணை, நல்லம்பள்ளி வட்டத்தில் தொப்பையாறு அணை, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வாணியாறு அணை, அரூர் வட்டத்தில் வள்ளிமதுரை (வரட்டாறு) அணை, காரிமங்கலம் வட்டத்தில் தும்பல அள்ளி அணை மற்றும் ஈச்சம்பாடி அணை என மொத்தம் 8 அணைகள் உள்ளன.

இவற்றில் ஈச்சம்பாடி அணை மட்டும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மற்ற அணைகள் அனைத்தும் சுற்றுவட்டார பகுதி மலைகள், குன்றுகள் போன்றவற்றின் நீராதாரங்களை நம்பி அமைக்கப்பட்டவை. சேர்வராயன் மலைத்தொடரில் வழிந்தோடும் நீரால் பயன்பெறும் வாணியாறு அணை சற்றே பெரியது.

இதன் மூலம் பாசனம் பெறும் ஆயக்கட்டு பரப்பு 10 ஆயிரத்து 400 ஏக்கர். இதுதவிர, பஞ்சப்பள்ளி அணையின் பாசனப் பரப்பு 4500 ஏக்கர், தொப்பையாறு அணையின் பாசனப் பரப்பு 5330 ஏக்கர், நாகாவதி அணையின் பாசனப் பரப்பு 1993 ஏக்கர், கேசர்குளி அணையின் பாசனப் பரப்பு 4000 ஏக்கர், தும்பல அள்ளி அணையின் பாசனப் பரப்பு 2617 ஏக்கர், வள்ளி மதுரை அணையின் பாசனப் பரப்பு 5108 ஏக்கர், ஈச்சம்பாடி அணையின் பாசனப் பரப்பு 6250 ஏக்கர் ஆகும்.

இந்த 8 அணைகளின் மூலம் நேரடியாக 40 ஆயிரத்து 198 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இதுதவிர, அணைகளின் நீர்த்தேக்கத்தின் உதவியால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் காக்கப்படுவதால் மறைமுகமாக பயனடையும் விவசாய நிலங்கள் பல ஆயிரம் ஏக்கர் ஆகும்.

எனவே, இந்த அணைகள் அனைத்தும் ஆண்டுதோறும் நிறைந்து விட்டால் மாவட்டத்தின் பெரும்பகுதி விளைநிலங்கள் ஆண்டு முழுக்க செழிப்புடன் காணப்படும். இவற்றில் தும்பல அள்ளி அணைக்கான நீர்வரத்து பாதைகள் உள்ளூர் தேவைகளுக்காக பல்வேறு பகுதிகளில் தடுக்கப்பட்டு விட்டதால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணை வறண்டே கிடக்கிறது.

இதற்கு தண்ணீர் கொண்டு வர மாற்றுத் திட்டம் கேட்டு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியும் வருகின்றனர். கிருஷ்ணகிரி அணை நிறைந்து விட்டால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஈச்சம்பாடி அணைக்கு தண்ணீர் வந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் இந்த அணை நிறைந்து விடுகிறது. வாணியாறு, பஞ்சப்பள்ளி அணைகள் அவ்வப்போது நிறைகின்றன.

ஆனால், கேசர்குளி, நாகாவதி, தொப்பையாறு, வள்ளிமதுரை ஆகிய அணைகள் கடந்த சில ஆண்டுகளாகவே பாதியளவு கூட நிறையவில்லை. இதனால் இந்த அணைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தற்போது, தோராயமாக வாணியாறு அணையில் 17 சதவீதம் தண்ணீரும், தொப்பையாறு அணையில் 3 சதவீதம் தண்ணீரும், நாகாவதி அணையில் 5 சதவீதம் தண்ணீரும், கேசர்குளி அணையில் 15 சதவீதம் தண்ணீரும், வள்ளி மதுரை அணையில் 10 சதவீதம் தண்ணீரும், ஈச்சம்பாடி அணையில் 65 சதவீதம் தண்ணீரும் மட்டுமே உள்ளன. தும்பல அள்ளி, பஞ்சப்பள்ளி அணைகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன.

நடப்பு ஆண்டிலாவது போதிய அளவில் பருவ மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும் என அந்தந்த பகுதி விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்தி இதுபற்றி கூறும்போது, ‘வளமான விளைநிலங்களை கொண்டுள்ள விவசாயிகள் நீர்வளம் இல்லாத ஒரே காரணத்தால் நிலங்களை தரிசாக விட்டுவிட்டு வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர்.

அணைகள் முழுமை யாக நிறைந்து விட்டால் ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் விவசாய பணிகளை தொடர முடியும். தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதம் வனமாக உள்ளது. இந்த வனத்தில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டால் மாவட்ட மழையளவை உயர்த்த முடியும். எனவே, அதற்கேற்ப திட்டங்களை வகுத்து அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்