தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது மட்டுமின்றி, மின் மிகை மாநிலமாக மாற வேண்டுமெனக் கருதினார் முன்னாள் முதல்வர் காமராஜர். அதற்காக, மழைப்பொழிவு அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்தில் பல அணைகளைக் கட்டி, மின் உற்பத்திக்குத் திட்டமிட்டார். ஆனால், அவரது காலத்துக்குப் பின் அந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக 1932-ல் சிங்காரா மின் நிலையம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதிலிருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு, பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின், தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் பல அணைகள் மற்றும் நீர் மின் நிலையங்கள் கட்ட திட்டம் வகுத்தார். முதலில் குந்தா, அவலாஞ்சி அணைகள் கட்டும் பணி 1956-ல் தொடங்கப்பட்டு, 1960-ல் முடிக்கப்பட்டன. தொடர்ந்து, கெத்தை, பில்லூர், எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து அணைகள் கட்டப்பட்டன. அதேகாலகட்டத்தில், இந்தியா-கனடா தொழில்நுட்பத்தில் குந்தா நீர் மின் நிலையங்களும் கட்டப்பட்டன.
1960-ல் குந்தா மின் நிலையம் 1-ல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி நீர் மின் நிலையங்கள் கட்டப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் மக்கள் பெருக்கத்தை கணக்கில்கொண்டு, மேலும் பல மின் நிலையங்கள், அணைகளைக் கட்ட காமராஜர் முயற்சித்தார். எனினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அவரது கனவுத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
காமராஜர் ஆட்சியின்போது, கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு புன்னம்புழா ஆற்றின் நடுவில் அணை, மின் நிலையம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. அதேபோல, தெப்பக்காடு, மாயாறு, கூக்கல்தொரை, கல்லாறு, வாகாலா, குடக்குரா, சேரம்பாடி சோலாத்திபுழாவிலும் அணை, நீர் மின் நிலையங்கள் கட்டி, மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.
மேலும், எமரால்டு-காட்டுகுப்பை பகுதியில் சில்லால்ஹா அணை, பவானி-எம்மனபுழா ஆறுகளைத் தடுத்து, அணை கட்டி, சுரங்கம் மூலம் ஈஸ்ட் வராகப்பள்ளம் அணைக்கு தண்ணீர் கொண்டுசெல்லவும் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், பல நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு, தமிழகத்தின் மின் தேவையை பெரிதும் பூர்த்தி செய்திருக்கலாம்.
மேலும், மாயார் அல்டிமேட் ஸ்டேஜ் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், நீலகிரி மாவட்டத்தில் 1,000 முதல் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்திருக்க முடியும். இந்த திட்டங்கள் தொடர்பான வரைபடங்கள், குந்தா மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளால் சிக்கல்!
நீர் மின் நிலையங்களின் கட்டுமானச் செலவு, இயந்திரங்களின் விலை மற்றும் வனத் துறை விதிமுறைகளால் நீர் மின் நிலையங்களைக் கட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளன.
தமிழக பசுமை இயக்கப் பொதுச் செயலர் எஸ்.ஜெயச்சந்திரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் மின் நிலையங்கள், அணைகளை, வனத் துறை நிலங்களில்தான் கட்ட வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். 1992-93-ல் கல்லாறு பள்ளத்தாக்கில் மின் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 'கல்லாறு பள்ளம் திட்டம்' எனப் பெயரிடப்பட்டது.
கல்லாறு பள்ளத்தாக்கு, குறுங் காடுகள் மற்றும் பசுமை மாறாக் காடுகள் நிறைந்த பகுதி. மேலும், யானைகளின் முக்கிய வழித்தடம். இப்பகுதியில் அணை கட்டப்பட்டிருந்தால், கல்லாறு பள்ளத்தாக்கில் உள்ள வனப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியிருக்கும். இதை எதிர்த்து தமிழக பசுமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராடியதால், அரசு அந்த திட்டத்தைக் கைவிட்டது. இதனால், கல்லாறு பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டது" என்றார்.
இந்நிலையில், நீர் மின் நிலையங்கள் கட்ட, அரசு போதுமான நிதியும் ஒதுக்கீடு செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. பல்லாயிரம் கோடி செலவு செய்து மின் நிலையம் கட்டினால், அதிலிருந்து 100 முதல் 500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும். எனவே, நீர் மின் திட்டங்கள் வேண்டாம் என்று மின் வாரிய உயரதிகாரிகளே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்துக்கு கொடுக்கும் கட்டணம், மத்திய அரசிடம் வாங்கும் மின்சாரத்துக்கு கொடுக்கும் தொகையை கணக்கிடும்போது, நீலகிரியில் புதிய நீர் மின் நிலையங்களைக் கட்டுவதற்கு செலவளிக்கும் தொகை பெரிதாக இருக்காது. மேலும், நீலகிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் மின் நிலையங்களைக் கட்டலாம் என்றும் மின் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு பின்னர்...
எரிசக்தி துறை சார்பில், உதகை அருகேயுள்ள காட்டுக்குப்பை பகுதியில் ரூ.1,850 கோடி மதிப்பில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 2021-2022-ல் நிறைவு பெறவுள்ள இத்திட்டம் மூலம், தினமும் 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். இதனால், ஆண்டுக்கு சுமார் 1,095 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும்.
மின் வாரியத்தினர் கூறும்போது, "இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது மற்றும் பசுமை சக்தி திட்டமாகும். ஆசியாவிலேயே அதிக அழுத்தம் மற்றும் உயரம் கொண்ட முதல் புனல் மின் உற்பத்தி நிலையமாகவும் இருக்கும். இதேபோல, போர்த்திமந்து அணையிலிருந்து, எமரால்டு அணைக்கு குகைக்குள் தண்ணீரைக் கொண்டுவந்து, காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின் உற்பத்தி செய்யப்படும். இதைத் தவிர, இரவு நேரங்களிலும், அதிக மின்சாரம் தேவையில்லாத காலத்திலும் எமரால்டு அணைக்கு வந்துள்ள தண்ணீரை, மீண்டும் போர்த்திமந்து அணைக்கே திரும்ப கொண்டுசென்று, அந்த தண்ணீரை வைத்தே சுழற்சி முறையில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். தண்ணீரை சுழற்சி முறையில் பயன்படுத்தி, தொடர்ந்து மின்சாரம் எடுக்கும் புதுமையான திட்டம் இது" என்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சில்ஹல்லா மின் திட்டம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும், இந்த திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. உலக வங்கிக் குழு, மின் வாரிய தலைமை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுக்கு இந்தப் பிரச்சினை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசின் ஒப்புதலுக்குப் பின்னர், பணிகள் தொடரும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago