உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: தாயை கைது செய்த போலீசாரிடம் கண்ணீர்விட்ட சிறுமி

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தாயை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் சிறுமி ஒருவர் அழுது புலம்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஆங்காங்கே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில் நேற்று (புதன்கிழமை) உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணிக்கு அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது போராட்டக்காரர்கள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரம் ஒன்றில் ஏறி போராட்டத்தில் ஈடுபட, அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கீழே இறக்கி சமரசப்படுத்தினர். அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது தாயை கைது செய்ய வேண்டாம் என்று கூறி சிறுமி கண்ணீர் மல்க போலீசாரிடம் இருகைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரது தாயாரை போலீசார் கைது செய்யவில்லை. மேலும், தங்களது நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம், வெளியே செல்லுங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறி சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க அதிகாரிகளை கேட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE