மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை” என்று அக்காலத்தில் கூறுவார்கள். உழவின் சிறப்பை விளக்கும் இந்தப் பாடலில், மாடு செய்யும் வேலையை, யானையை பயன்படுத்திச் செய்வதாகக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், “தற்போது அந்த யானைதான் விவசாயப் பயிர்களை அழித்து, உழவர் பெருமக்களை அழவைக்கிறது. யானை மட்டுமல்ல, காட்டுப்பன்றி, மயில், கரடி என பல்வேறு விலங்குகளாலும் கண்ணீர் வடிக்கிறோம்” என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
ஒரு பயிரை நடவு செய்து, சாகுபடி செய்து, மகசூல் பெறுவதற்குள் படாதபாடு படுகிறார்கள் விவசாயிகள். இயற்கை இடர்பாடுகளால் மட்டுமின்றி, விலங்குகளாலும் பயிர்கள் சேதமடைந்து, விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பல மாதங்கள் பாடுபட்டு வளர்த்த பயிர்களை நொடிப் பொழுதில் அழித்துவிடுகின்றன விலங்குகள். குறிப்பாக, மலையடிவாரப் பகுதிகளிலும், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் விலங்குகளால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவது அதிகம்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகள் நிறைந்த கோவை மாவட்டத்தில், விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்திலும் மனுக்கள் அளிப்பதுடன், பலகட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இதுபோல பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமியிடம் பேசினோம்.
“பொதுவாக வனத்தை விட்டு விலங்குகள் வெளியில் வராது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக வனத்திலிருந்து வெளிவந்து, வயல்வெளியில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்ல, குடியிருப்புகளிலும் நுழைந்து, வீடுகளை, கடைகளை சேதப்படுத்துவது, ரேஷன் கடைகளை உடைத்து, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, வாகனங்களை நொறுக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
கோவை மாவட்டத்தில் ஒரு காலத்தில் கரும்பு, நெல் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டன. யானை தொந்தரவு காரணமாகவே கரும்பு பயிரிடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது வாழை, தென்னை, காய்கறிப் பயிர்கள், மக்காச்சோளம், சோளம் மற்றும் மாடுகளுக்குத் தேவையான புல் உள்ளிட்ட தீவனப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
கூட்டமாய் வரும் காட்டுப்பன்றிகள்!
இந்த நிலையில், ஆனைகட்டி, தடாகம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், வேடப்பட்டி, நரசிபுரம், செம்மேடு, மத்திபாளையம், தீத்திபாளையம் என பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் வயல்வெளிகளில் நுழைந்து, பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.
குறிப்பாக, வாழை, தென்னை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பெரிதும் சேதத்துக்கு உள்ளாகின்றன. இதேபோல, காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை முண்டு (அடிப்பகுதி), கோரைக்கிழங்கு, நிலக்கடலை, அருகம்புல், கிழங்குகள் உள்ளிட்ட வற்றை தின்றுவிடுகின்றன அதுமட்டுமல்ல, எல்லா பயிர்களின் வேர் பகுதியையும் தோண்டி, அந்தப் பயிரை அழித்துவிடுகின்றன.
முன்பெல்லாம் ஓநாய், நரி, கரடிகள் அதிகம் இருந்தபோது, மயில்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது.
தற்போது அந்த விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மயில்கள் பல்கிப் பெருகியுள்ளன. அவை, தக்காளி, காலிபிளவர், மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களை கடும் சேதத்துக்கு உள்ளாக்குகின்றன. கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழைந்து, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளைக் கொன்றுதின்றுவிட்டுச் செல்கின்றன. பயிர்களை மட்டுமின்றி, கண்ணில்படும் விவசாயிகள், பொதுமக்களையும் விலங்குகள் தாக்குகின்றன. யானை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மிகக் குறைந்த இழப்பீடு!
விலங்குகளால் சேதமடையும்பயிர்களுக்கு அரசு சார்பில் மிகக் குறைந்தஅளவிலேயே இழப்பீடு வழங்கப்படுகிறது.
10 ஏக்கர் பரப்புக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், 2.5 ஏக்கர் மட்டுமே கணக்கில் எடுக்கிறார்கள். மேலும், இழப்பீட்டுத் தொகையை வழங்குவதிலும் வருடக் கணக்கில் காலதாமதம் செய்கிறார்கள். எனவே, தோட்டக்கலை, வருவாய், வனத் துறையினர் இணைந்து, உரிய இழப்பீட்டைக் கணக்கிட்டு, காலதாமதமின்றி உடனடியாக இழப்பீட்டை வழங்க
வேண்டும். வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைந்தால், பயிர்க்காப்பீடே வழங்கப்படுவதில்லை. எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், வன விலங்குகள் சேதத்தை கணக்கில் கொள்ளும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் வழங்கப்படும் இழப்பீடுகளில் பாதியளவுகூட தமிழ்நாட்டில் வழங்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வழங்கப்படும் அளவுக்காவது இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்.
அதேபோல, வன விலங்குகள் தொடர்பாக முறையான கணக்கெடுப்பு நடத்தி, அவற்றால் பாதிக்கப்படும் விவசாயப் பயிர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். விலங்குகள் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எங்கேயோ காயமடையும் அல்லது எங்கேயோ விஷத்தை சாப்பிடும் விலங்குகள், வேறு ஏதாவது வயல்வெளியில் வந்து விழுந்து, இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட வயல் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கிலிருந்து வெளிவருவதற்குள் விவசாயி மிகுந்த வேதனைக் குள்ளாகிவிடுவார். விலங்குகள் இறந்தால், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் ஆர்வம் காட்டும் வனத் துறையினர், பாதிக்கப்படும் விவசாயிகளைக் கண்டுகொள்வதில்லை என்பது வேதனைக்குரியது.
வனத்திலிருந்து வெளிவருவது ஏன்?
வனத்தில் போதுமான அளவுக்கு உணவும், தண்ணீரும் கிடைத்தால், விலங்குகள்காட்டைவிட்டு வெளியே வரப்போவதில்லை. குறிப்பாக, காடுகளில் தண்ணீர் இல்லாததால்தான், விலங்குகள் ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்குகின்றன. வனப் பகுதிகளில் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதில், வனத் துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். யானை தடுப்பு அகழிகளை உரிய முறையில் பராமரித்து, ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும்.
விலங்குகளின் வாழ்விடங்கள், குறிப்பாக யானை வழித்தடங்கள் பெரிதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், கல்வி, தொழில், சமய நிறுவனங்கள், ரிசார்டுகள் என விலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அவை ஊருக்குள் நுழைகின்றன. இதுவே மனித- விலங்கு மோதல்களுக்கு வழிவகுக்கிறது.
வயல்வெளிகளில் பயிர்களை மட்டுமின்றி, அங்குள்ள மோட்டார்கள், சொட்டுநீர்ப் பாசன அமைப்புகள், மின்சார பெட்டிகள், வேலிகள் என அனைத்தையும் சேதப்படுத்திவிடுகின்றன யானைகள். இவை எதற்குமே இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி மின் வேலி அமைக்க மானியம் வழங்க வேண்டும். பன்றி, மயில் ஆகியவற்றை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
மத்திய அரசின் வனச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வனத் துறையிலும் போதுமான பணியாளர்கள் இல்லாததால், விலங்குகளை விரட்ட அவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, வனத் துறையில் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும்.
நகர்ப் பகுதிகளில் குடியிருந்துகொண்டு, வயல்வெளிகளில் இருந்து விலங்குகளை துரத்தக் கூடாது, விரட்டக் கூடாது என்றெல்லாம் கோஷமெழுப்புபவர்கள், விவசாயிகளின் துன்பங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு முழு மகசூல் கிடைத்தால், அது ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமானது என்பதை மறந்துவிடக்கூடாது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago