கோவில்பாளையம் அருகே சோகம்: பன்றிக் கழிவுகள் இருந்த தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கோவை அருகே பன்றிக்கழிவுகள் இருந்த தொட்டியைச் சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சத்தி சாலை கணபதி அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(70). இவர், கோவில்பாளையம் அருகேயுள்ள கீரணத்தம் லட்சுமி கார்டனில் சொந்தமாக பன்றி வளர்ப்புக் கூடம் வைத்துள்ளார். சுமார் அரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் தோட்டத்தில் 7 சென்ட் பரப்பில் பன்றி வளர்ப்புக் கூடம் உள்ளது. இங்கு பன்றிகளின் கழிவுகளைச் சேகரித்து வைக்க 10-க்கு 14 அடி என்ற நீள அகலத்தில், 10 அடி ஆழத்தில் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியை இறுதிக்கட்டமாக சுத்தம் செய்யும் பணிக்காக நேற்று கோவில்மேட்டைச் சேர்ந்த ராஜப்பன் (38), பெ.வேடியப்பன் (29), பொ.வேடியப்பன்(26), ரமேஷ், சரவணன், பாபு ஆகிய 6 பேரை சுப்பிரமணியம் அழைத்து வந்தார்.

முதலில் தொட்டிக்குள் இறங்கிய ராஜப்பன் விஷவாயு தாக்கி மயங்கினார். இதைப் பார்த்த  பெ.வேடியப்பன், பொ.வேடியப்பன் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி ராஜப்பனை மீட்க முயன்றனர். அப்போது இரண்டு வேடியப்பன்களும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே மயங்கினர். மயங்கிய மூன்று பேரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கணபதி தீயணைப்பு நிலையத்துக்கும், கோவில்பாளையம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தொட்டியில் இருந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட மூன்று பேரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE