காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,022 ஏரிகளில் 1,017 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. 5 ஏரிகளில் 25 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 909 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 93 ஏரிகள், சென்னையைச் சேர்ந்த 16 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஏரிகள் என மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன.
இவற்றில், தாமல், தென்னேரி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், கொளவாய், பாலூர், மணிமங்கலம், பி.வி.களத்தூர், காயார், மானாம்பதி, கொண்டங்கி, சிறுதாவூர், தையூர், மதுராந்தகம், பல்லவன் குளம், தூசி மாமண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள 17 ஏரிகள் மிகப் பெரியனவாகும்.
இவற்றில் தென்னேரியை நம்பி 5,858 ஏக்கரும், உத்திரமேரூர் ஏரியை நம்பி 5,636 ஏக்கரும் விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோல், மாமண்டூர் ஏரியை நம்பி 4,188 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மதுராந்தகம் ஏரி, தாமல் ஏரி, பாலூர் ஏரி ஆகிய ஒவ்வொரு ஏரிகளையும் நம்பி தலா 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. மற்ற ஏரிகளை நம்பி 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கொளவாய் ஏரியைச் சுற்றி 627 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை நம்பி 1,11,965 ஹெக்டர் (சுமார் 2,79,900 ஏக்கர்) விவசாய நிலங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த ஏரிகளில் நத்தப்பேட்டை, கலியனூர், கூடுவாஞ்சேரி, நின்னக்கரை, கொளவாய் ஆகிய 5 ஏரிகளில் மட்டுமே 25 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மீதமுள்ள முக்கிய ஏரிகள் 17 உட்பட 1,017 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியும் வறண்டுவிட்டது. இந்த ஏரி உட்பட சில ஏரிகளில் குட்டைபோல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
விவசாய நிலங்கள் பாதிப்பு
ஏரிகளில் தண்ணீர் வறண்டதால் இந்த ஏரிகளை நம்பியுள்ள விவசாய நிலங்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சிலர் ஆழ்துளை கிணறு, கிணற்றுப் பாசனம் மூலம் சிறிய அளவில் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, ‘‘வறட்சியால் தண்ணீர் வறண்டு விட்டதாக கூறுகின்றனர். இருப்பினும், பாலாற்றில் இருந்து பம்பைக் கால்வாய், பொன்விளைந்த களத்தூர் வழியாக செல்லும் கால்வாய் உட்பட பல்வேறு கால்வாய்கள் ஏரிகளுக்குச் செல்கின்றன. இந்த கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளன. இவற்றைச் சீரமைத்தால் மழைக்காலங்களில் பாலாற்றில் இருந்து இதன் வழியாக ஏரிக்கு அதிக அளவு நீர் செல்லும். ஏரிகளை சீரமைப்பதாகக் கூறி கரைகளை மட்டுமே சரி செய்கின்றனர். ஏரிகளை முழுமையாகத் தூர்வார வேண்டும். ஏரிகளைத் தூர்வாரும்போது அந்தந்த ஏரிப் பாசனவிவசாயக் குழுக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். இதன்மூலம் மழைக்காலத்தில் ஏரியில்தண்ணீரைத் தேக்கி கோடைகாலத்தில் ஓரளவு சமாளிக்க முடியும்’’ என்றார்.
பொதுப்பணித் துறை உதவிச் செயற் பொறியாளர் பாஸ்கரனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 1,022 ஏரிகளில் 1,017 ஏரிகள் வறண்டுவிட்டன. தற்போது ஏரி சீரமைப்பு பணிகள் ஏதும் தொடங்கும் நிலையில் இல்லை. நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க பாலாற்றில் தடுப்பணை அமைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நிதிநிலை அறிக்கையில் அரசு நிதி ஒதுக்கிய உடன் ஏரிகளைச் சீரமைக்கும் நடவடிக்கை தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago