மதுரை மக்களை அச்சுறுத்தும் ‘டெல்டா போலீஸ் படை’ அப்பாவி இளைஞரை காவு வாங்கிய கொடூரச் சம்பவம் தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு தீவிரச் சிகிச்சை

By என்.சன்னாசி

மதுரையில் வாகனச் சோதனை என்ற பெயரில் டெல்டா போலீஸ் படை லத்தியால் தாக்கியதில் அப்பாவி இளைஞர் உயிரிழந்தார். இந் நிலையில், கணவரை இழந்த சோகத்தில் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிவிரைவுப் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை, நகரில் சிறப்பு ரோந்துப் பணிக்கு பயன்படுத்த உத்தரவிட்டார்.

மேலும், தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் ‘ டெல்டா’ என்ற 5 சிறப்பு ரோந்துப் படைகளை உருவாக்கினார். ஒவ்வொரு படையிலும் எஸ்ஐ ஒருவர் தலைமையில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சாலையில் விதிமீறி வாகனங் களை நிறுத்துவோரை எச்சரிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடி நிற்பவர்களை கலையச் செய்வது, குற்றச் செயல்புரியும் நோக்கி கூடி யிருப்பவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பது போன்ற பணிகள் மட்டும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

ஆனால் வாகனத் தணிக்கை, அபராதம் விதிப்பது போன்ற வழக்கமான பணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக டெல்டா படையினர் பிடித்துக் கொடுத்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக ‘டெல்டா’ படையினர் கூடுதல் அதிகாரம் படைத்தவர்கள் போன்று செயல்படுவதும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவோரை சகட்டுமேனிக்கு திட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். பலர் வசூல் ஒன்றையே நோக்கமாகக்கொண்டு செயல்படத் தொடங்கினர். இதனால் இவர்களின் பாதை மாறியது. மாலை நேரம் ஆகி விட்டாலே போதும். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வசூல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் கடந்த சனிக் கிழமை செல்லூர் புதுப்பாலம் அருகே 3-வது டெல்டா படையினர் இரவு 11.30 மணிக்கு மேல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த டயர் கடை உரிமையாளர் விவேகானந்த குமாரை (38) வழிமறித்தனர். அவர் வண்டியை நிறுத்துவதற்குள் அவரை சரமாரியாக லத்தியால் தாக்கியதில் , பலத்த காயமடைந்து அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவருக்கு இரண்டரை ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்து மனைவி கஜப்பிரியா, ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர்.

சொந்தமாக தொழில் செய்து முன்னேறி வந்த இளைஞரை, போலீஸார் அநியாயமாக கொலை செய்து விட்டார்களே என அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற மனைவி

தனது கணவர் இறந்த செய்தி அறிந்து கடும் அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி கஜப்பிரியா, தனது ஒன்றரை வயது மகன் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார்.

இருப்பினும், கணவரின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற் கொலைக்கு முயன்றார். குடும் பத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதித்துள்ளனர். இதனால் உற வினர்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அத்துமீறிய ‘டெல்டா போலீஸ் படை’

இதுபற்றி விவேகானந்த குமாரின் உறவினர்கள் கூறிய தாவது: விவேகானந்த குமாரை ‘டெல்டா’ படையினர் தான் அநியாயமாக பிடித்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.

அந்த படையினர் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி, பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா படையினரின் அராஜகம் தடுக்கப்பட வேண்டும். அப்படையை ஆணையர் கலைக்க வேண்டும். இதற்கும் மேல் இந்த படையினரின் அட்டூழியத்தை ஆணையாளர் வேடிக்கை பார்த்தால் அது விபரீதமாகி விடும். விவேகானந்தகுமாரை தாக்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில்தான் அரசு மருத்துவமனை உள்ளது. அவரை டெல்டா படையினர் துரிதமாக மருத்துவமனையில் சேர்த்திருந்தால் பிழைத்திருப்பார்.

தங்கள் தவறை மறைக்க, சம்பவ இடத்தில் தடயங்களை போலீஸார் தண்ணீர் ஊற்றி அழித்து இருக்கின்றனர்.

செல்லூர் எம்ஜிஆர் பால இறக்கம், தைக்கால் தெருவில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பாலத்தின் அருகேயிருந்த கேமரா பதிவுகளை எங்களுக்கு காட்ட வேண்டும். ஆனால், கேமரா பதிவுகளை போலீஸார் அழித்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற போலீஸாரின் அத்துமீறல் நகரில் இனிமேலும் தொடரக்கூடாது. சம்பந்தப்பட்ட டெல்டா படை யின் எஸ்ஐ ரத்தினவேல் தலைமையிலான காவலர்களை கைதுசெய்து, அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

போலீஸ் தெளிவுபடுத்தாததால் குழப்பம்

விவேகானந்தகுமார் இறப்பு தொடர்பாக விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், கடந்த 15-ம் தேதி இரவு 11.30 மணிக்கு, அவர் தனது ஊழியர் சரவணக்குமாருடன் சென்றபோது, செல்லூர் எம்ஜிஆர் பாலம் இறக்கத்திலுள்ள சந்திப்பில் வாகனச் சோதனையில் இருந்த போலீஸார் மறித்தனர்.

போலீஸாருக்கு பயந்து தப்பிச் சென்றபோது கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், போலீஸார் பைக் சக்கரத்தில் லத்தியை நுழையச் செய்து கீழே விழச் செய்ததாக உறவினர்கள் மற்றும் அங்கிருந்தோர் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவ இடத்தில் கேமரா பதிவுகளை சேகரித்து இளைஞரின் உறவினர்களுக்கு தெளிவுபடுத்துவதையும் போலீஸார் செய்யவில்லை. பிரேதப் பரிசோதனை குறித்த தகவலையும் துரிதமாகப் பெற்று குடும்பத்தினரிடம் விளக்காததால் போலீஸார் மீது சந்தேகம் வலுத்து வருகிறது. இதனால் மன அழுத்தத்தில் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பற்றி சிபிசிஐடி விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை உறுதி

இதுபற்றி காவல் துணை ஆணையர் சசிமோகன் கூறியது:

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட டெல்டா போலீஸாரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இறக்கத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. இருப்பினும், வர்த்தக நிறுவனங்களிலுள்ள கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் யார் மீது தவறு என அறியப்படும். மேலும், விவேகானந்தகுமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றியும் தெரியவரும். போலீஸார் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டெல்டா படை வாகனச் சோதனை செய்யலாமா?

டெல்டா படையினர் போக்குவரத்து விதிமீறல், குற்றச் செயல் புரிவோரைப் பிடித்து, அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். வாகனச் சோதனைக்கு அனுமதியில்லை. ஒவ்வொரு நாளும் டெல்டா படையினர் என்ன பணி செய்தோம், எத்தனை பேரை பிடித்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தோம் என்பது குறித்து காவல் ஆணையரிடம் புள்ளி விவரம் அளிக்கவேண்டும். ஆனால், இவர்களே சட்டத்தை மீறி பொதுமக்களிடம் மிக அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.

இளைஞர் குடும்பத்தினர் கோரிக்கை

உறவினர்கள் கூறுகையில், போலீஸாரால் மரணம் அடைந்த விவேகானந்த குமாரின் மனைவிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். வாகனச் சோதனை என்ற பெயரில் விவேகானந்தகுமாரை தாக்கி கொலை செய்த எஸ்ஐ ரத்தினவேல் மற்றும் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்பாபு, கந்தசாமி, பிரபு ஜீவன், மணிகண்டன் ஆகியோரை பணி நீக்கம் செய்யவேண்டும். இது போலீஸாருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்