ராணுவ அதிகாரிகளாகும் பெண் பொறியியல் பட்டதாரிகள்: பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை

பொறியியல் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்களிடையே, ராணுவத்தில் சேர்ந்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக சென்னைப் பெண்கள் திகழ்கின்றனர்.

சென்னை ராணுவ பயிற்சி மையத் தில் பயிற்சியை முடித்த 225 பேர் சனிக் கிழமையன்று இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக இணைந்துள்ளனர். அவர்கள் ராணுவத்தில் சேரும் விழா பயிற்சி மையத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. இவர்களில் மீனாட்சி சுந்தர்ராஜன் கல்லூரியில் பொறியியல் படித்துள்ள அனுராதாவும், அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்துள்ள அஜிதாவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.

இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் சேராமல் ராணுவத்தில் இணைந்துள்ளனர். ஜம்முவில் பணியில் சேரவுள்ள இவர்கள் இருவரும், தங்கள் குடும்பங்களிலிருந்து ராணுவத் தில் சேரும் முதல் நபர் என்பதில் பெருமை கொள்கின்றனர். இதே போன்று மீஞ்சூரில் வசிக்கும் காப்ரியலா ராஜன் சென்னை வேல் டெக் கல்லூரியில் பொறியியல் முடித்து, மணிப்பூரில் பணியில் சேரவுள்ளார்.

அனுராதாவின் தாய் கமலா இதுபற்றி கூறும்போது, “எங்கள் மகளை ராணுவ அதிகாரியாக பார்ப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். அவள் விரும்பியபடியே ராணுவத்தில் சேர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.பெண்கள் அதிகமாக ராணுவத்தில் சேர வேண்டும். அதே நேரத்தில் ராணுவத்தில் அவர்களுக்கான பணியிடங்களையும் அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வர வேண்டும்,” என்றார்.

ராணுவத்தில் சேர்ந்தது குறித்து அஜிதா கூறும்போது, “தென்னிந்தியர்கள் ராணுவத்தில் சேர முன்வருவதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், ராணுவத்தில் திறமையான தென்னிந்தியர்கள் பலர் உள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE