கோடைகாலம் முடியும் தருவாயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள குளம் நீர் நிறைந்திருக்கிறது. இக்குளத்தின் அருகேயுள்ள பல நீர்நிலைகள் வறண்டு காணப்படும் சூழலில், 100 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், இச்சிப்பட்டி, பூமலூர், மங்கலம் என 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் 2.5 லட்சம் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் செந்தேவிபாளையம் அணைக்கட்டிலிருந்து ராஜ வாய்க்கால் மூலமாக சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.
செந்தேவிபாளையம் அணைக்கட்டின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள கதவு வழியாக ராஜ வாய்க்காலுக்கு வரும் நீர், 20 அடி அகலமுள்ள வாய்க்காலில் 4.75 கிலோ மீட்டர் வரை பயணித்து, சாமளாபுரம் குளத்தை வந்தடைகிறது. அணைக்கட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரை சிமென்ட் தளத்தில் இருக்கும் வாய்க்கால், பிறகு மண் வழிப்பாதையில் செல்கிறது.எனினும், இந்த நீர்வழித்தடம் தற்போது முட்புதர்கள் நிறைந்து, தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும், நீர்வழிப் பாதையின் இருபுறங்களிலும் புதர் மண்டியுள்ளது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், நொய்யலாற்றில் நீர் வந்தால் குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபடும் என்பதை உணர்ந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ராஜ வாய்க்காலைத் தூர்வார முடிவு செய்தனர். தன்னார்வலர்கள், இளைஞர்கள், ரோட்டரி சங்கத்தினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து, நீர்வழிப்பாதையைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சாமளாபுரம் பெரியகுளம் பள்ளபாளையம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கனகசபாபதி பேசும்போது, “கடும் வெயில் காலத்திலும் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு ஓரளவு தண்ணீர் கிடைப்பதற்கு இந்தக் குளமே காரணம். எனவே, குளத்துக்கான நீர்வழிப் பாதைகளைப் பராமரிப்பது மக்களின் கடமை. விரைவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், நொய்யலாற்றிலிருந்து குளத்துக்கு நீர் தடையின்றி வர வேண்டும் என்பதற்காக, பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். அனைத்து தேவைகளுக்கும் அரசை எதிர்பார்க்காமல், நம்மால் முடிந்த வரை நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ராஜவாய்க்கால் பராமரிப்புப் பணிக்குப் பிறகு, செந்தேவிபாளையம் அணைக்கட்டிலிருந்து மங்கலம் வரை 10 கிலோமீட்டர் தொலைவுக்கு நொய்யலாற்றை சுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பொதுப்பணித் துறையிடம் அனுமதியை கோரியுள்ளோம். நொய்யலாற்றின் நீர்வழிப் பாதையில் முட்புதர்களை அகற்றினால், தங்குதடையின்றி தண்ணீர் செல்லும். மழைக்காலத்துக்கு முன்பாகவே இதை செய்ய வேண்டுமென்பதால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைவாக அனுமதியளிக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago