அலட்சியத்தால் தூர்வாராத வாய்க்கால்கள்-மோசமாகும் நீர்நிலைகள்: உறக்கத்தில் புதுச்சேரி அரசு?

By செ.ஞானபிரகாஷ்

சிறிய மாநிலமான புதுச்சேரியில் மழைப்பொழிவு போதிய அளவு இல்லாமல் குறைந்துள்ள சூழலில் வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் கோடையிலேயே  தூர்வாரப்படாமல் இருக்கும் அலட்சியப் போக்கினால் நீர்நிலைகள் மோசமான நிலைக்கு மாறி வருகிறது. வரும் மழைக்காலத்துக்குத் திட்டமிடாமல் புதுச்சேரி அரசோ ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.

புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுக்கும் ஜீவநதிகளோ, தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகளோ  இல்லை.  ஆனாலும் இதுவரை தண்ணீர் பிரச்சினை மக்களுக்கு ஏற்படாதற்கு முக்கியக் காரணம், கடைமடைப் பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்திருந்தன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைந்தன. இதனால் மக்களுக்குத் தேவையான குடிநீர் தொடங்கி தொழிற்சாலை, விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாய் இருந்தன.

நீர்நிலைகளான ஏரிகள் பராமரிப்பு இல்லாமல் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கத் தொடங்கின.  பல இடங்களில் நீர்நிலைகள் மண்ணைக் கொட்டி மேடாக்கப்பட்டு பல விதமான தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள், குளங்களும், அரசின்  பாராமுகத்தால் தூர்ந்துபோயும், கழிவுநீர் அடையும் நீர்நிலைகளாகவும் மாறி வருகிறது. இது போன்ற காரணங்களால் புதுச்சேரியில் விவசாய நிலங்களும் கணிசமாக குறைந்து வருகிறது.

குறிப்பாக கடந்த 1970-ல் 48,842 ஹெக்டேர் விளைநிலங்கள் இருந்தன. 2000-ம் ஆண்டில் அவை 24,329 ஹெக்டேராக குறைந்தது. 2009-ல் 17,469 ஹெக்டேரில் இருந்து தற்போது 15 ஆயிரம் ஹெக்டேராக விளைநிலம் குறைந்துள்ளது.

புதுச்சேரியின் முக்கிய ஊசுடு ஏரியோ தற்போது வறண்டுள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் எப்போதும் வற்றாத நீர் ஆதாரமாக இருந்துவந்த இந்த ஏரி நடப்பாண்டு வறண்டு, பாலைவனமாக காட்சியளிக்கிறது. இது போல் புதுச்சேரியில் பல ஏரிகள், குளங்கள்  துர்வாராததால் அனைத்தும் தூர்ந்து போய் வறண்டு வருகிறது. பல ஏரிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் ஒரு சில ஏரிகள் நிரம்பியுள்ளன. இதற்குக் காரணம் அதிக அளவு கழிவுநீர்தான். குறிப்பாக கனகன் ஏரி நிரம்பியுள்ளது. இதில் அதிக அளவு கழிவுநீரே உள்ளதாக குறிப்பிடுகின்றனர். அண்மையில் இங்கு மீன்கள் இறந்து மிதந்து, அவை ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உதாரணமாக கனகன் ஏரிக்குச் செல்லும் நீர்வரத்து செல்லும் ஷண்முகாபுரம் வாய்க்கால் தொடங்கி பல வாய்க்கால்கள் கழிவுகளால் அடைத்து கிடப்பதே நிதர்சனம்.

காணாமல் போன நீர்வரத்து வாய்க்கால்கள்:

புதுச்சேரியில் மட்டும் 127.5 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்களை நீர்பாசனக்கோட்டம்  பராமரிக்கிறது. இதைத்தவிர செஞ்சி ஆறு, பெண்ணையாறு, குடுவையாறு, பம்பையாறு, மலட்டாறு என 82 கி.மீ. நீளமுள்ள ஆற்றங்கரைகளும் நீர்பாசனக் கோட்ட பராமரிப்பில் உள்ளன.

புதுச்சேரியானது தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் விழுப்புரம், கடலூர் பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்குச் சென்று தேங்கும் வகையில் நீர் வரத்து வாய்க்கால்களும் உருவாக்கப்பட்டு இருந்தன. வாய்க்கால்களில் செல்லும் தண்ணீர் ஏரியில் நிரம்பும். ஏரி நிரம்பிவிட்டால் நீர் வழிந்து குளம், நீர்பிடிப்பு பகுதி போன்றவற்றுக்குச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

குளம் போன்றவையும் நிரம்பினால், பக்கத்தில் உள்ள மற்றொரு ஏரியில் நிரம்பி, அருகில் உள்ள ஆறுகளின் வழியாக கடலுக்குச் செல்வதுபோல சங்கிலித் தொடராக பாசன அமைப்புகளை முந்தைய காலத்தில் முன்னோர் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது இந்த பாசன வாய்க்கால்கள் இருந்த சுவடுகள் தெரியாமல் மாயமாகி வருகின்றன.

வாய்க்கால்களின் தற்போதைய நிலை தொடர்பாக விவசாய சங்கங்களிடம் விசாரித்தபோது, "பல இடங்களில் வாய்க்கால்கள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, அவர்களின் சொத்தாகிவிட்டன. புதுச்சேரியில் 2010-11 ஆம் ஆண்டின் அரசு புள்ளிவிவரப்படி 4,558 வாய்க்கால்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகூர் சித்தேரி வாய்க்கால், பங்காரு வாய்க்கால், மணமேடு, கடுவணூர் இருந்து வரும் ஊரல் குட்டை வாய்க்கால், ஊசுட்டேரி ஏரி வாய்க்கால், தொண்டமானத்தம் ஏரி வாய்க்கால், கூனிச்சம்மேடு பழைய, புதிய வாய்க்கால்கள், திருக்கனுார், மங்களம், கோர்காடு, நெட்டப்பாக்கம், வாதானுார் ஆற்று வாய்க்கால்கள் இவை நீர் வரத்திற்கு வித்திட்டவையாக விளங்கின.  ஆனால், இவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிறது. தூர்வாராததால் அவைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறது" என்றனர்.

குப்பை அள்ளாததும் முக்கியப் பிரச்சினை

புதுச்சேரியில் முக்கிய பெரிய ஏரிகள் தூர்வாராதது தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் விசாரித்தபோது, "ஊசுட்டேரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தூர்வாரத் தடையில்லாத ஆணை கேட்டோம். தூர்வாரும் மண்ணை வெளியே எடுத்துசெல்லக்கூடாது உள்ளேயே கொட்ட வேண்டும் என்ற அறிவுறுத்தி அனுமதி தந்தனர்.ஆனால் தூர்வார அரசு ரூ. 10 கோடி வரை அரசு ஒதுக்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஒதுக்கவில்லை. தொடர்ந்து மழை அளவு குறைந்தததுதான் வறண்ட நிலைக்கு காரணம். குப்பையை ஏரி, குளங்களில் கொட்டுவது இன்றும் தொடர்கிறது. அதை தடுக்க வேண்டியது நகராட்சிகள்தான். நகரப்பகுதிகளில் வாய்க்கால்கள், கிளைவாய்க்கால்களைத் தூர்வாரியபோது அதிக அளவில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு, இறைச்சிக் கழிவுகளே கிடைத்தன. பலரும் வாய்க்கால்களில் குப்பை கொட்டுகின்றனர். மக்களோ நகராட்சிகள் குப்பைகளைச் சரியாக அகற்றுவதில்லை என்கின்றனர். இதுவும் முக்கியக் காரணம் " என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்