மலைவாழ் முறைப்படி இறுதிச்சடங்கு: விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் ரமேஷின் மனைவி

ஜம்புகண்டி அருகே உயிரிழந்த மருத்துவர் ரமேஷின் மனைவிக்கு மலைவாழ் மக்களின் முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது. அத்துடன் விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கோவை தடாகம் சாலை கணுவாயைச் சேர்ந்தவர் ரமேஷ். ஹோமியோபதி மருத்துவர். இவரது மனைவி ஷோபனா (45). இவர்களது மகள் சாந்தனா தேவி (16). இவர், ஆனைகட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ம் தேதி ஷோபனா, பள்ளியில் படிக்கும் மகள் சாந்தனாதேவியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஷோபனா உயிரிழந்தார். சாந்தனா தேவி, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜி (17), அசோக் (25) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து, அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள், ''விபத்து நடந்த பகுதிக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை  உள்ளது. இந்த மதுக்கடையில் இருந்து மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மோதிதான் ஷோபனா உயிரிழந்தார். இந்த மதுக்கடையில் குடித்து விட்டு வெளியே வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்'' என வலியுறுத்தினர். அத்துடன் உயிரிழந்த ஷோபனாவின் சடலத்தை சாலையில் வைத்தபடி ரமேஷ், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி ''இந்த மதுக்கடை (எண்: 2222) தற்காலிகமாக மூடப்படும். பின்னர், நிரந்தரமாக மூடப்படும்'' என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். விபத்து தொடர்பாக பாலாஜி மீது துடியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நேற்று உடல் அடக்கம்

உயிரிழந்த ஷோபனாவின் உடலை, மலைவாழ் மக்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட ஆசைப்பட்டார் கணவர் ரமேஷ். இதனால் விபத்து நடந்த ஜம்புகண்டி அருகேயுள்ள மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் மயானத்தில், அவர்களது முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்களால் மூட வலியுறுத்தப்பட்ட மேற்கண்ட டாஸ்மாக் மதுக்கடை கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று கூறும் போது, ''விபத்து நடந்த பகுதிக்கு அருகே குறிப்பிட்ட இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கவும், ’பள்ளி உள்ளது, குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும்’ என்பது போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கவும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

சர்ச்சைக்குள்ளான கடை

ஜம்பு கண்டி பகுதி மக்கள் கூறும் போது,''இந்த பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கேரளா சென்று விடலாம். கேரளாவில் உள்ள ஆனைகட்டி மது இல்லாத மண்டலமாக அந்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மதுக்கடை, கள்ளுக்கடை போன்றவை இல்லை. எனவே, கேரளாவில் உள்ளவர்கள், ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள்  ஜம்புகண்டியில் உள்ள இந்த கடைக்கு வந்துதான் மது அருந்துகின்றனர்.

தினசரி ஏராளமானோர் இந்த கடைக்கு வந்து செல்வதால், இங்கு தினசரி ரூ.4 லட்சத்துக்கு குறையாமல் மது விற்பனை நடக்கிறது. மாவட்டத்திலேயே இந்த மதுக்கடையில்தான் விற்பனை அதிகம். இந்த கடையை மூட வேண்டும், இல்லை எனில் அடித்து உடைக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்ட்களால் எச்சரிக்கை நோட்டீசும் இங்கு ஒட்டப்பட்டது. அதை தொடர்ந்து சில நாட்கள் கடை மூடப்பட்டு இருந்தது. பின்னர் வழக்கம் போல் திறக்கப்பட்டு விட்டது. இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE