வெளி மாநில அதிகாரிகள் அம்மா உணவகத்தில் ஆய்வு: ஆந்திராவில் என்.டி.ஆர் உணவகம் அமைக்க திட்டம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை ஆந்திராவின் அனந்தபுரம் நகராட்சி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் வியாழக் கிழமை பார்வையிட்டனர்.

ஆந்திராவில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் பெயரில் என்.டி.ஆர். உணவகங்கள் தொடங்க ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆர்வத்துடன் இருப்பதால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை பார்வையிட 13 குழுக்கள் வியாழக்கிழமை வந்திருந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு, அங்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்த அனந்தபுரம் நகராட்சி ஆணையர் ஜெ.சீனிவாசலு கூறியதாவது:

ஆந்திராவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா உணவகம் போன்ற மலிவு விலை என்.டி.ஆர். உணவகங் களைத் தொடங்கும் திட்டமுள்ளது. அனந்தபுரத்தில் 5, திருப்பதியில் 5, விசாகப் பட்டினத்தில் 20, விஜயநகரத்தில் 15 உணவகங்களை முதல் கட்டமாக அக்டோபர் 2-ம் தேதி முதல் தொடங்கவுள்ளோம். அம்மா உணவகங்களில் மலிவு விலையில் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் உணவு வழங்கும் திட்டத்துக்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தென் டெல்லி மாநகராட்சியின் கூடுதல் சுகாதார அலுவலர் டாக்டர் எம்.கே.பால் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவும் அம்மா உணவ கத்தை பார்வையிட்டது. அப்போது சென்னை மாநகர சுகாதார அலுவலர் குகானந்தம் மற்றும் கூடுதல் சுகாதார அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE