இன்று உலக தேங்காய் தினம்: வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை

By என்.சுவாமிநாதன்

“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதுதான் அதற்கு காரணம்.

தமிழக அளவில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.

தொடக்க காலங்களில் கன்னியா குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தென்னை சாகுபடியே நடைபெற்று வந்தது. ரப்பர் பயிரில் கிடைத்த அதிக லாபம் காரணமாக விவசாயிகள் பெரும்பாலானோர் ரப்பர் சாகுபடிக்கு மாறினர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் குமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்தவர்கள் இப்போது மீண்டும் தென்னைக்கு மாறி வருகின்றனர்.

வாடல் நோய்

இன்னொரு புறம் கேரள வாடல் நோய் குமரி மாவட்ட தென்னை சாகுபடியாளர்களை மிரட்டி வருகிறது. இது குறித்து பேசிய முன்னோடி விவசாயி செண்பகசேகரன், மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தேங்காய் சாகுபடி இருக்கும். பொதுவாக தேங்காய் அறுவடையை நல்வெட்டு, சில்வெட்டு என இரண்டாக பிரிப்போம். நல்வெட்டில் நல்ல மகசூல் இருக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அது சில்வெட்டு.

கேரள வாடல் நோய் தாக்கிய தென்னை ஓலையின் நீளம் குறைந்து விடும். ஓலையும் பச்சையத்தை இழந்து வெளிறி போய்விடும்.

இந்நோய் தாக்கிய தென்னையில் காய்ப்புத் திறன் குறைந்து விடும். இந்நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. குமரி ஆட்சியர் நாகராஜனின் தொடர் முயற்சியால் இப்போது நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்ற 500 ரூபாயும், புதிய தென்னங்கன்றும் கொடுத்து வருகிறார்கள். இதை சிறிது உயர்த்தி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய ரகமான ஈத்தாமொழி நெட்டை தென்னை மரங்கள் ஈத்தாமொழி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ரகங்களை கேரள வாடல் நோய் அதிகம் தாக்கவில்லை. மத்திய அரசின் புவிசார் குறியீட்டிலும் ஈத்தாமொழி நெட்டை தென்னை இடம்பிடித்துள்ளது. இது குறித்து தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி லூயிஸிடம் கேட்டபோது, `கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய ரகமான ஈத்தாமொழி நெட்டை தென்னையில் காயின் பருப்பு அடர்த்தியாக இருக்கும்.

மன்னர் ஆட்சிக் காலங்களில் கிரேக்க வியாபாரிகள் பண்ட மாற்று முறையில் இங்கு வந்து தேங்காய் வியாபாரம் செய்ததாக சொல்வர். இன்றும் சென்னையில் இந்த தேங்காய்களுக்கு தனி சந்தை வாய்ப்பு உள்ளது” என்றார்.

52 ஆண்டுகளாக வருவாய்

ஈத்தாமொழி நெட்டை தென்னை நடவு செய்திருக்கும் எறும்புகாட்டை சேர்ந்த, குமரி மாவட்ட உழவர் பெருமன்ற தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறும்போது, பாரம்பரியமான இந்த ரகத்தை நடவு செஞ்சுருக்கேன். பொதுவா ஒட்டு ரக தென்னை மரங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் மகசூலை முடிச்சுக்கும். என் தோட்டத்தில் இருக்குற இந்த பாரம்பரிய ரகத்துக்கு 52 வயசு ஆச்சு. இன்னிக்கும் அதே ஆளவு மகசூலை கொடுத்துட்டு இருக்கு. கேரள வாடல் நோயும் இந்த பாரம்பரிய ரகத்தை அண்டவில்லை”என்றார்.

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் பாரம்பரியத்தின் பெருமையே விவசாயிகளை கரை சேர்த்து கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்