மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு தொலைதூரக் கல்வி மூலம் பட்டயப் படிப்பு முடித்து பிஇ படித்தவர்கள் தேர்வு செய்யப்படுவதால், பாலிடெக்னிக்கில் நேரடியாக சேர்ந்து பட்டயப் படிப்பு முடித்துவிட்டு பின்னர் பிஇ படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர், ஃபோர்மேன், லைன்மேன், கணக்கீட் டாளர், கமர்ஷியல் வணிக ஆய்வாளர் மற்றும்மேற்பார்வையாளர், உதவி செயற்பொறியாளர், தலைமை பொறியாளர் என பல்வேறு பதவிகள் உள்ளன. கடந்த 1986-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, மின்வாரியத்தில் 1.49 லட்சம் பணியாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது 86 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், உதவிப் பொறியாளர் பணிக்கு பதவி உயர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை, உதவிப் பொறியாளர் என பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில்,தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும். இப்பணியில் சேர்ந்த ஊழியர்கள் பின்னர் உதவிப் பொறியாளர் பணி வரை பதவி உயர்வு பெறுவர்.
இவ்வாறு பதவி உயர்வு பெற வேண்டுமெனில் டிப்ளமோ படிப்பை ஏதாவது ஒரு பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்துவிட்டு, பின்னர் பிஇ படிப்பை ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரப் படிப்பாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகள் தொலைதூரக் கல்வி மூலம் தொடங்கப்பட்டன. மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேரும் ஊழியர்கள் சிலர் பணம் கொடுத்து இப்பல்கலைக்கழகத்தில் முறையாக படிக்காமலேயே சான்றிதழ் பெறுகின்றனர்.
அதை வைத்து தமிழகத்தில் உள்ள சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர படிப்பாக பிஇ சேர்ந்து படிக்கின்றனர். துறைரீதியான உள் பதவி உயர்வுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படும்போது, அச்சான்றிதழைப் பயன்படுத்தி பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். இதனால், முறையாக பாலிடெக்னிக்கில் சேர்ந்து டிப்ளமோ படித்துவிட்டு பணிக்கு சேர்பவர்களுக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது.
மேலும், அரசு பாலிடெக்னிக்கில் பகுதி நேர டிப்ளமோ படிப்பை முடிக்க 4 ஆண்டு காலம் ஆகும். ஆனால், ராஜஸ்தானில் உள்ளதொலைதூரக் கல்வியில் 2 ஆண்டுகளில் டிப்ளமோ படிப்பை முடித்து விடலாம். முறையாக பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பை முடித்து பணிக்கு சேருபவர்கள் உதவிப் பொறியாளராக பதவி உயர்வு பெற வேண்டுமெனில், குறைந்தது 20 வருடங்கள் வரை ஆகிறது. ஆனால், இவர்கள் விரைவாக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர்.
இதனால் 800 முதல் ஆயிரம் ஊழியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள். இவர்கள் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வுபெற்று விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி பதவி உயர்வுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும்போது, தொலைதூரக் கல்வி மூலம் பட்டயப் படிப்பு முடித்து விட்டு பின்னர் பிஇ முடித்தவர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக, முறையாக பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து விட்டு பின்னர் பிஇ முடித்தவர்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பதவி உயர்வுக்கு விதிப்படிதான் ஊழியர்கள் தேர்வு செய்யப்படு கின்றனர். எனினும், இக்கோரிக்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago