உன்னதமான கலையான பரதம் நமது பாரம்பரியக் கலை. இந்தக் கலை எட்டுத்திக்கும் பரவி, நிறைய பேர் சலங்கை கட்டி நடனமாட வேண்டும். அதுவே என் லட்சியம்” என்கிறார் சுமார் 40 ஆண்டுகளாக பரத நாட்டியக் கலையைக் கற்பித்து வரும் கோவை ஆர்.பி.பொன்னம்பலம்.
தமிழகத்தில் உருவான இந்திய பாரம்பரிய நடனத்தில் ஒருவகை பரத நாட்டியம். முன்னர் `சதர்' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நாட்டியம் குறித்து சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் சிற்பங்கள் வடிக்க பரதநாட்டியம் பெரிதும் உதவியுள்ளது. பரத நாட்டியத்தில் 108 கரணங்கள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை தனது ஏழு வகைத் தாண்டவங்களில் சிவன் வெளிப்படுத்துவதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கலையாக கருதப்பட்ட பரத நாட்டியக் கலை, தற்போது பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் கற்கப்பட்டும், கற்பிக்கப்பட்டும் வருகிறது. இந்தக் கலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சர்வதேச அளவில் சாதித்துள்ளனர்.இத்தகு பரத நாட்டியக் கலையை ஏராளமானோருக்கு கற்பித்து வருகிறார் பொன்னம்பலம். அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாகவும் இக்கலையைக் கற்பித்துள்ளார். கோவை புது சித்தாபுதூர் ஆர்.வி.என்.லேஅவுட் பகுதியில் அவரை சந்தித்தோம்.
ராமன் பாகவதரின் பாட்டு வகுப்பு!
“அன்னூர் தாலுகாவில் உள்ள பட்டகாரன்புதூர் என்ற குக்கிராமம்தான் பூர்வீகம். பெற்றோர் ராமன் பாகவதர்-பொங்கியம்மாள். அப்பா பாட்டு வகுப்பு நடத்தி வந்தார். இரணிய வதம், பக்த பிரகலாதன் கதைகளை சொல்லிக்கொடுப்பார். அப்பாவிடம் பயின்ற பலரும் பஜனை கோஷ்டிகளைத் தொடங்கி நடத்தி வந்தனர். குடும்ப வறுமைச் சூழல் காரணமாக புளியம்பட்டியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு முடித்தேன். அதேசமயம், 6-ம் வயது முதலே அப்பாவிடம் பாட்டும் கற்கத் தொடங்கினேன். 13-வது வயதில், கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்களூரில் மாஸ்டர் கே.ஆர்.சசிகுமாரிடம் நாட்டியம் பழகத் தொடங்கினேன். அன்னூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடுங்களூருக்கு வாரம் ஒரு முறை லாரி பிடித்து போய்வருவேன். பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் உள்ள அக்கா வீட்டில் நெசவு நெய்து, அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டியம் கற்றேன்.
1980-ல் கோவையைச் சேர்ந்த நாட்டிய மாணவர்கள் சேர்ந்து, மாஸ்டர் சசிகுமாரை கோவைக்கு வரவழைத்து, நாட்டியம் பழகினோம். சில மாதங்களிலேயே எனது நாட்டியத் திறமையால் வியந்த அவர், தனியாக நாட்டியப் பள்ளி வைக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, கவுண்டம்பாளையத்தில் நாட்டியப் பள்ளியைத் தொடங்கினேன். இதற்கிடையில், திருவிடைமருதூர் டி.என்.ராஜலட்சுமி, மதுரை கிட்டப்பா மாஸ்டர், மும்பை ராஜராஜேஸ்வரி கலாமந்திர் ஆசிரியர்கள், ஈரோடு சிவகாமி நாட்டியாலயா ராஜாராம் ஆகியோரிடமும் நாட்டியம் கற்றுக்கொண்டேன்.
1983-ல் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய நடனப் போட்டியில் பங்கேற்ற நான், முதல் பரிசு வென்றேன். தொடர்ந்து, அரசுப் பொருட்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தினேன். மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, 1,000-க்கும் மேற்பட்ட பரத நாட்டியம், கிராமிய நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.
30 ஆயிரம் பேருக்கு பயிற்சி!
சித்தாபுதூரில் ஸ்ரீகிருஷ்ணா நாட்டிய கலாஷேத்திரம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறேன். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுக் கொடுத்துள்ளேன். 1992 முதல் 12 ஆண்டுகள் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த (5 மாணவிகள் பட்டாலியன்) வீராங்கனைகளுக்கு இலவசமாக பரத நாட்டியம் கற்றுக் கொடுத்தேன். 1994-95-ல் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா முகாமில், நான் கற்றுத்தந்த நடனத்தை ஆடி, முதல் பரிசு வென்றனர் தமிழ்நாடு என்.சி.சி. மாணவிகள். இதன் காரணமாக அந்த ஆண்டு தமிழ்நாடு என்.சி.சி. அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மேட்டுப்பாளையம், அன்னூர், கருவலூர், அவிநாசி, சோமனூர், வாகராயம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக பரத நாட்டியக் கலை கற்றுக் கொடுத்துள்ளேன். மேலும், நான் நடத்தும் நாட்டியப் பள்ளியிலும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறேன்.
எனது மாணவி சந்தியாவுக்கு, அப்பா கிடையாது. அம்மா கூட்ஸ் ரயிலில் இருந்து சிந்தும் அரிசியைப் புடைத்து, விற்று, அதில் குடும்பம் நடத்தி வந்தார்.
நன்கு நடனம் பயின்ற சந்தியா, தற்போது சென்னையில் தனியாக பரத நாட்டியப் பள்ளி நடத்துகிறார். இதேபோல, கோவை, சென்னை, அமெரிக்கா, இங்கிலாந்து, பெங்களூரு, டெல்லி, வியட்நாமில் எனது மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் பரத நாட்டிய பயிற்சி மையங்களை நடத்துகின்றனர்.கடந்த மாதம் கிருஷ்ணா நாட்டிய கலாஷேத்திரத்தின் 40-ம் ஆண்டு விழாவில், முதுபெரும் கலைஞர்கள் 60 பேருக்கு `கலைக்கோயில்’ விருது வழங்கி கௌரவித்தோம்.
பழங்குடி மாணவிகளுக்கு...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள மலைவாழ் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள பழங்குடி மாணவிகளுக்கு ஒரு மாதம் பரத நாட்டிய வகுப்பு நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். மதுக்கரையில் உள்ள மெஹர் சைல்டு வில்லேஜ் ஆசிரமம், கோவை சேவா ஆசிரமம், அன்னூர் பதுலம்பள்ளி பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமக் குழந்தைகளுக்கு இலவசமாக நாட்டியப் பயிற்சி அளிப்பதுடன், அவர்களது நடனத்தை அரங்கேற்றம் செய்யவும் உதவியுள்ளோம்” என்றார் பெருமிதத்துடன் பொன்னம்பலம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago