போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட காவலர் அடித்துக் கொலை? - அறைகளில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பலர் மீட்பு

By அ.வேலுச்சாமி

திருச்சியிலுள்ள தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய ஆய்வின்போது அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பலர் மீட்கப்பட்டனர்.

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் 'லைஃப் கேர் சென்டர்' என்ற பெயரில் தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சீ.மணிவண்ணன் என்பவர் இதனை நடத்தி வந்தார்.

இங்கு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகேயுள்ள கண்டமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவரும், பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தவருமான தமிழ்செல்வன் (36) என்பவர் கடந்த 28-ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அடுத்த ஓரிரு நாட்கள் ஆன நிலையில், ஜூன் 1-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் இறுதிசடங்கு ஏற்பாடுகளைச் செய்தபோது தமிழ்ச்செல்வனின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. எனினும், அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.

இதற்கிடையே, தமிழ்ச்செல்வன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் இதுபற்றி விசாரிப்பதற்காக இன்று (திங்கள்கிழமை) கே.கே.நகரிலுள்ள மறுவாழ்வு மையத்துக்கு வந்தனர்.

அப்போது தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரின் கேள்விகளுக்கு அங்கிருந்தவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறைகளில் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். சிலர் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த வெங்கடேசன் என்பவர், தன்னை மீட்டுச் செல்லும்படி தமிழ்ச்செல்வனின் உறவினர்களிடம் கதறினார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்தக் காவலர் மற்றும் தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த விவரங்களைப் புகாராக அளித்தனர. அதன்பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், சிகிச்சை மையத்திலிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பலரது உடலில் குச்சிகளால் அடித்தது, இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்ததற்கான காயங்கள் இருந்தன.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் உறவினரான காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த இளங்கீரன் கூறும்போது, "போதையை மறக்கச் செய்வதற்கான மருந்து ஒப்புக் கொள்ளாமல் தமிழ்ச்செல்வன் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறி, எங்களது வீட்டுக்கே கொண்டு வந்து உடலை ஒப்படைத்தனர். ஆரம்பத்தில் நாங்களும் அதை உண்மையென நம்பினோம். ஆனால் இறுதிச் சடங்கு செய்தபோது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.

இதனால் சந்தேகப்பட்டு விசாரிக்க வந்தபோதுதான், இங்கு சிகிச்சை பெறுவோரை தாக்கி, சங்கிலியால் கை, கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. தமிழ்ச்செல்வன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே இதுகுறித்து விசாரிக்குமாறு கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அரியலூரைச் சேர்ந்த தலைமைக் காவலர் வெங்கடேசன் கூறும்போது, "கடந்த 2 மாதமாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். 2 மாதங்களில் இது 2-வது உயிரிழப்பு, ஒரு வாரத்துக்கு முன் கண்ணன் என்பவர் இதேபோல் உயிரிழந்தார். தமிழ்ச்செல்வனை கடந்த 31-ம் தேதி முதல் அடித்து சித்ரவதை செய்தனர். 1-ம் தேதி மாலை இறந்துவிட்டார். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் தமிழ்ச்செல்வனை அடித்தனர். இவரை மட்டுமல்ல, கை மற்றும் கால் விலங்கினை அவிழ்த்துவிடுமாறு கூறினாலோ அல்லது பக்கத்தில் யாரிடமாவது பேசினாலோ அடிப்பார்கள்.

இதற்காகவே இங்கு திவான், ரமேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களின் கொடுமைக்கு என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவரங்களை கே.கே.நகர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளேன்", என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்பதற்காக மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரும், மனநல ஆலோசகருமான சீ.மணிவண்ணனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, "இங்கு 27 பேர் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் பலரை, தற்போது அவர்களின் உறவினர்களே நேரில் வந்து சங்கிலிகளை அகற்றி அழைத்துச் சென்றுவிட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்