மணிக்கு 300 கிலோமீட்டர் என அதிவேகத்தில் பறக்கக்கூடியவை சாஹின் ஃபால்கன் பருந்துகள். நீலகிரி மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ள இந்தப் பருந்து இனத்தையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் நிறைந்தது நீலகிரி மாவட்டம். வன விலங்குகளைத் தவிர, பருந்து, கழுகு, இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது இந்த மாவட்டம்.
நீலகிரி மாவட்டத்தின் காலநிலை ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்துள்ளது. இதனால், ஐரோப்பியா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நீலகிரி மாவட்டத்துக்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, வெளிநாடுகளைச் சேர்ந்த பறவை இனங்களும் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வலசை வருகின்றன.
குறிப்பாக, குளிர்காலத்தில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. இவ்வாறு வரும் பறவைகள், நீர்நிலைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள சதுப்பு நிலங்களில் தங்குகின்றன. அங்கு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஹின் ஃபால்கன் பருந்தினம்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் வசிக்கும் இந்தப் பருந்துகள் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை. உலகிலேயே அதிவேகமாகப் பறக்கும் பறவையினங்களில் இதுவும் ஒன்று. நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா முதல் தொட்டபெட்டா வரையிலான பள்ளத்தாக்கு மற்றும் மலைச்சரிவுப் பகுதிகளில் இப்பறவைகள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இதனால், இப்பகுதிகளில் பாறை இடுக்குகளில் இவை வாழ்ந்து வருகின்றன. அழியும் பட்டியலில் இந்தப் பறவையினம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாஹின் ஃபால்கன் பருந்துகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உதகை அரசு கலைக் கல்லூரி விலங்கியல் மற்றும் வன உயிரியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.ராமகிருஷ்ணன் கூறும்போது, "சாஹின் ஃபால்கன் பருந்து இனம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதிகள், மலைச் சரிவான பகுதிகளில் காணப்படுகின்றன. இவை இரையைத் தாக்கும்போது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்துக்குமேல் பறக்கும். நீலகிரியில் 8-க்கும் மேற்பட்ட சாஹின் ஃபால்கன் பருந்தின் வாழ்விடங்கள் உள்ளன. இவற்றில் 25 முதல் 30 பறவைகள் மட்டுமே உள்ளன.
மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலும் இவற்றின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இரைச்சல் உள்ளிட்டவற்றால், பருந்துகளின் இனப்பெருக்கக் காலங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் வெளியே இப்பறவைகளின் வாழ்விடங்கள் அமைந்துள்ளதால், சில நேரங்களில் மனிதர்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது. தோட்டங்களில் குப்பையை எரிக்கும்போது, இந்தப் பறவைகளின் கூடுகள் எரிந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே, சாஹின் ஃபால்கன் பருந்துகளைக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago