பிஞ்சுக் குழந்தைகளை வெம்பச் செய்யலாமா?- இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

By ஆர்.கிருஷ்ணகுமார்

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வோர் உயிருக்கும் பல உரிமைகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது கல்வி கற்கும் உரிமை. ஆனால், சிறு வயதிலேயே அவர்களை பணிக்கு அனுப்பி, அவர்களது கல்வி உரிமையைப் பறிப்பது ஏற்கமுடியாத செயல். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைக் கண்டித்து உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து,  இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது ஐக்கிய நாடுகள் சபை.

ஐ.நா.வின் ஓர் அங்கமான பன்னாட்டுத்  தொழிலாளர் அமைப்பால் (ஐ.எல்.ஓ.), குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 2002-ம் ஆண்டு முதல்  ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1986-ல் குழந்தைத் தொழிலாளர் முறை தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, 1987-ல் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், குழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்புப் பணிகளும்      தொடங்கின. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டாசுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, மாநிலத்திலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில்  தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1995-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத் தலைவருமான கு.ராசாமணி கூறும்போது, “கோவை மாவட்டத்தில் செங்கல் சூளை, பஞ்சாலைகள், வாகன பட்டறைகள், ஜவுளி ஆலைகள் மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பல்வேறு துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, தொடர் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. குழந்தைகளை மீட்பது மட்டுமின்றி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக, வால்பாறை, மேட்டுப்பாளையம், தொண்டா முத்தூர், தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கல்வியுடன், விளையாட்டு, தொழிற்கல்வி, அனுபவக் கல்வி, தலைமைப் பண்பு பயிற்சி, ஆளுமைத் திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை கற்றுத் தரப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த குழந்தைகள், முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதுவரை பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று, நல்ல நிலையை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், ஜார்க்கன்ட், அசாம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் கோவைக்கு வந்து தங்கி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது குழந்தைகளையும் மீட்டு, சிறப்புப் பள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம். தமிழ் மொழியே அறியாத பல குழந்தைகள் சிறப்புப் பள்ளிகளில் நன்கு கல்வி கற்று, மேல்நிலைக் கல்வி வரை பயின்றது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, சீருடை, நோட்டுப் புத்தகங்கள், எழுதும் உபகரணங்கள், காலணிகள், மதிய உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், மத்திய அரசின் உதவியுடன்  மாதந்தோறும் ரூ.400 ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே இந்த தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவதும், மீட்கப்பட்ட அத்தனை பேருக்கும் மறுவாழ்வு அளிப்பதையுமே லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம். இன்னும் இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, திட்டத்தின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இணைய தளத்தில் (www.pencil.gov.in) புகார் பதிவு செய்தால், அடுத்த 48 மணி நேரத்தில் குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறும்போது, “கண்டறியப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் முதல்கட்டமாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். குழந்தைத் தொழிலின் அவலம், கல்வியின் முக்கியத்துவம், படிப்பதால் ஏற்படும் நன்மைகள், எதிர்காலம் குறித்தெல்லாம் விளக்குகிறோம். பின்னர் அவர்களை சிறப்புப் பயிற்சி மையத்தில் சேர்த்து, கல்வி கற்பிப்பதுடன், திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறோம். பயிற்சி மையப் படிப்புக்குப் பின்னர், முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பிறகும், அவர்கள் இடைநின்றுவிடாமல் படிக்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.

மேலும், மேல்நிலைக் கல்வி முடித்த பின், கல்லூரிக் கல்வி பயில ஆலோசனை வழங்குவதுடன், கல்லூரியில் சேர உதவிகளும் செய்கிறோம். அவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவி பெற்றுத் தருவது, படிப்பு முடித்த பின், தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி, முடிந்தவரை வேலையில் சேரவும் உதவுகிறோம். அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தவும், வாழ்க்கைத் தரம்

மேம்படவும் இயன்ற உதவிகளை செய்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்