ஒரு குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்து, சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் வழிகாட்டுகின்றன. வீட்டில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டே காய்கறிகளை விளைவிக்கலாம் என்பதுதான் இதில் `ஹைலைட்’.
மக்களின் உடல் ஆரோக்கியம், நாட்டின் பொருளாதாரம் போன்றவற்றில் காய்கறி உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. 2016-17-ம்
ஆண்டின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 10.24 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு, 178.17 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன. காய்கறிகளில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.
வேளாண் இடுபொருட்களின் விலையேற்றம், போக்குவரத்து செலவு, மொத்த சந்தையில் இருந்து சில்லறை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான தரகுச் செலவு தொடர்ந்து அதிகரிக்கிறது. மறுபுறம் மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பால், காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், “நமக்குத் தேவையான காய்கறிகளை, வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்து நாமே உற்பத்தி செய்து கொள்வது சிறந்தது” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான கு.ராமசாமி.
“வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க நீராதாரம் உள்ள, சூரிய ஒளி கிடைக்கும் வெட்டவெளிப் பகுதி மிகவும் ஏற்றது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 5 சென்ட் நிலம் இருந்தால் போதுமானது. நிலத்துக்கு ஏற்றவாறு சிறு தோட்டம் அமைத்து கொள்ளலாம். இதில் செவ்வக, சதுர வடிவ தோட்டம் அமைத்து, ஆண்டு முழுமைக்கும் காய்கறி உற்பத்தி செய்யலாம்.
தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பாகற்காய், புடலை, பீர்க்கன்காய், சுரைக்காய், முருங்கை, கொத்தவரை, பந்தல் அவரை, மரவள்ளி கிழங்கு, கேப்பக்கிழங்கு, சேனைக் கிழங்கு, சிறு கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் கீரை வகைகள் பயிரிட ஏற்றவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தின் ஓரத்தில் 3-4 செ.மீ. நீளம் மற்றும் ஒரு மீட்டர் அகலம் கொண்ட பகுதியில் நீண்டகாலப் பயிர்களான முருங்கை, கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழை, பப்பாளி போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கிவிட்டு, எஞ்சிய பகுதிகளின் நடுவே நடைபாதை அமைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் காய்கறிகளை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.நிலத்தை மண்வெட்டி கொண்டு ஓரடி ஆழத்துக்கு வெட்டி, மண்ணை நன்றாகக் கிளறிவிட வேண்டும். அதில் உள்ள கற்கள், மண் கட்டிகள், முட்செடிகள், களைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
பின்னர் 500 கிலோ தொழுஉரத்தை மண்ணில் நன்றாக கலக்கிவிட வேண்டும். பின்னர் 45 அல்லது 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக சிறு பாத்திகளும் அமைத்துக் கொள்ளலாம். நிலத்தை நீள, அகலவாக்கில் ஆறு பாத்திகளாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
முதல் பாத்தியில் கத்தரி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டை போன்றவற்றை ஜூன் முதல் செப்டம்பர் வரை அல்லது அக்டோபர்-நவம்பர் அல்லது பிப்ரவரிமுதல் மே மாதம் வரை பயிரிடலாம். 2-ம்பாத்தியில் தக்காளி, பீட்ரூட், முள்ளங்கி, தட்டைப்பயிறு போன்றவற்றை ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் டிசம்பர், ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிரிடலாம்.
மூன்றாம் பாத்தியில் குத்து அவரை, டர்னிப், கொத்தவரை போன்றவற்றை ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் ஜனவரி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும் சாகுபடி செய்யலாம்.
நான்காம் பாத்தியில் வெண்டை, கீரை, காலிஃபிளவர், முள்ளங்கி, கீரை போன்றவற்றை ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் ஜனவரி, பிப்ரவரி-மார்ச் மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் பயிரிடலாம். ஐந்தாம் பாத்தியில் மிளகாய், வெங்காயம், கீரை, கத்தரி, முள்ளங்கியை ஜூன் முதல் நவம்பர், டிசம்பர்-ஜனவரி மற்றும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பயிரிட வேண்டும். ஆறாம் பாத்தியில் பெரிய வெங்காயம், குடை மிளகாய், குத்து அவரையை ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரி முதல் மே மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
நேரடி விதைப்புக் காய்கறி களான வெண்டை, குத்து அவரை, கொத்தவரை, தட்டைப்பயிறு போன்றவற்றை பார்களின் இருபுறமும் 30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
கீரை விதைகளை, ஒரு பங்கு விதைக்கு20 பங்கு மணல் கலந்து, பாத்திகளில் தூவிவிட வேண்டும். நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றின் விதைகளை ஒரு மாதத்துக்கு முன்பாகவே மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து விதைக்க வேண்டும். 30-40 நாட்களில் நாற்றுகள் முளைத்தவுடன், அவற்றைப்
பறித்து பார்களில் நடவுசெய்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் நடவு செய்ய வேண்டும்.
பின்னர், தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.
பூசணி, பரங்கி போன்ற தரையில் படரும் விதைகளை, பாத்திக்கு இரு விதைகள் வீதம் குழிகளில் விதைத்து, கொடிகளை தரையில் படரச் செய்ய வேண்டும். காய்கறிப் பயிர்களுக்கு கலப்பு உரத்தை செடிக்கு 5 கிராம் என்ற அளவில் இட வேண்டும். பஞ்சகவ்யா கலவையை 30 மில்லிலிட்டர் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
புழுக்கள் தென்பட்டால் அவற்றை சேகரித்து, அழித்துவிட வேண்டும். அல்லது வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். தேனீ பெட்டிகள் வைத்து மகரந்த சேர்க்கையை அதிகரிக்கலாம்.
இதனால் அதிக ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் கிடைக்கும். பறித்த உடனே சமைத்து உண்டால் சுவை அதிகமாக இருக்கும். குறைந்த இடத்தில் சாகுபடி செய்வதால் பூச்சி, நோய் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. தோட்டம் வைத்துப் பராமரிப்பது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். வெளியில் காய்கறி வாங்குவதற்கான செலவும் வெகுவாகக் குறையும்” என்றார் பேராசிரியர் கு.ராமசாமி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago