சென்னையில் முதல் திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரியக் கட்டிடமான விக்டோரியா பப்ளிக் ஹாலில் இறுதிகட்ட புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த அரங்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள பச்சையப்பன் அரங்கில் கடந்த 1882-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர். சென்னை மாநகருக்குஎன ஒரு நிகழ்ச்சி அரங்கம் அமைக்க வேண்டும் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது. அதற்கென அறக்கட்டளை அமைக்கப்பட்டு, (பின்னர் அதற்கு ‘விக்டோரியா நினைவு அறக்கட்டளை’ என பெயரிடப்பட்டது.) அந்த அறக்கட்டளை மூலமாக 1886-ம் ஆண்டு 3.14 ஏக்கர் பரப்பளவு இடம், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டது.
அங்கு ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் செலவில், அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இந்தோ - சார்சனிக் கட்டிடக் கலையில் மாநகர அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. அது 1887-ல் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு ‘பப்ளிக் ஹால்’ என பெயரிடப்பட்டது. அப்போது இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வந்ததால், ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என அழைக்கப்பட்டது. 132 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்று பெயர் பெற்ற விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு, சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் உண்டு.
‘மெட்ராஸ் போட்டோகிராபிக் ஸ்டோர்’ நடத்திவந்த டி.ஸ்டீவன்சன் தன்னிடம் 10 குறும்படங்கள் வைத்திருந்தார். அவற்றை 1896-ல் இந்த விக்டோரியா ஹாலில்தான் திரையிட்டார். தவிர, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்டோர் இந்த அரங்கில் உரையாற்றியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த அரங்கத்தை நடத்திவந்த விக்டோரியா நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட குத்தகை காலம் முடிவடைந்தது. இதையடுத்து, அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, கடந்த 2009-ல் விக்டோரியா பப்ளிக் ஹால் மாநகராட்சி வசம் வந்தது.
அதன் பின்னர், பழமை மாறாமல் அந்த அரங்கை ரூ.3 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியது. பணிகள் நிறைவடையும் நிலையில், அங்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதால், புனரமைப்பு பணி நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு புனரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பணி, விக்டோரியா ஹால் புனரமைப்பு பணி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால், மெட்ரோ ரயில் பணிகள் முடிவதற்காக காத்திருந்தோம். இதற்கிடையில், வார்தா புயலின்போதும் அரங்கம் சேதத்தை சந்தித்தது. அதனால் மீண்டும் ரூ.1 கோடியே 56 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளோம்.
அரங்கின் உறுதித் தன்மையை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். புனரமைப்பு பணி முடிந்த பிறகு, நிர்வாகக் குழு அமைக்கப்பட உள்ளது. பின்னர், மக்களிடம் கருத்து கேட்டு, இந்த அரங்கில் எத்தகைய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கலாம், எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago