தமிழக தென்னை விவசாயிகளின் நீண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகள் வாயிலாக வென்றெடுக்கப் பட்டது நீரா இறக்குவதற்கான அரசின் அனுமதி.
இந்த அனுமதி கிடைத்து ஓராண்டாகியுள்ள நிலையில், நீரா பானத்தைக் கெடாமல் பாதுகாத்து, வணிக ரீதியில் விற்பனையை அதிகரிக்க முடியாமல் திணறி வருகின்றனர் விவசாயிகள். நீரா விவசாயிகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்யாததுதான் இந்த நிலைக்குக் காரணம் என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
தமிழகத்தில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் தென்னை விவசாயம் உள்ளது. அதேபோல, தஞ்சை, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளனர். ஓரளவு தண்ணீர் வசதி இருக்கும் பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, தென்னை சாகுபடி நடைபெறுகிறது.
ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்பு செலவு குறைவு, ஓரளவு கட்டுபடியான விலை போன்றவை, நிறைய விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறக் காரணமாக உள்ளன.கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, மழையை நம்பியிருக்கும் மானாவாரித் தென்னைகள்தான் அதிகம். இவை, தொடக்ககால நாட்டு மரங்கள். சராசரியாக மரத்துக்கு 80 முதல் 100 தேங்காய்கள்தான் கிடைக்கும். மேலும், அங்கு தென்னை விரிவாக்கம் நடைபெறவே இல்லை.
இறவைப் பாசனத்திலும் தென்னை சாகுபடி இல்லை. ரப்பர் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால், தென்னை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ரப்பர் மர வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு தேங்காய் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. அதனால்தான், கொப்பரை உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் நாட்டுரக தென்னைகளை விட, குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுக்கும் வீரிய ரக தென்னை அதிகம் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மரம் ஒன்றிலிருந்து 300 தேங்காய் வரை அறுவடை செய்யக்கூடிய ரகங்கள் வந்து விட்டன. தேங்காய் உற்பத்தி அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம். இந்த நிலையில், கேரளாவில் முதன்முதலாக அறிமுகமான நீரா, மக்களின் வரவேற்பைப் பெற்று, விவசாயிகளை வாழவைக்கிறது. நீரா விவசாயிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு, தலா ரூ.1 கோடி வரை கடனுதவி அளிக்கிறது அம்மாநில அரசு.
கேரளத்தை பின்பற்றி, தமிழகத்திலும் நீரா இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீரா இறக்க தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. தலா 1,000 விவசாயிகளைக் கொண்ட உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கியவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிகாட்டும் குழுவும் ஏற்படுத்தப்பட்டது. நீரா விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதே இக்குழுவின் நோக்கம். இதில், வேளாண் துணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள், தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப பயிலகம், கேரள காசர்கோட்டில் உள்ள மத்திய தென்னை பயிர் வளர்ச்சி பயிலகம், தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், நீராவில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது குறித்தும், நீரா பானத்தைக் கெடாமல் பாதுகாப்பது, சந்தைப்படுத்துவது குறித்தும் ஓராண்டுக்கு மேலாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உடுமலைப்பேட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, “தமிழகத்தில் 12 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா எடுக்க அரசு அனுமதித்துள்ளது. தொடக்கத்தில் வரவேற்பு இருந்தாலும், தற்போது இதை சந்தைப்படுத்தவும், கெடாமல் பாதுகாக்க உரிய தொழில்நுட்ப உதவியும்
இல்லாததால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இதுவரை ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட நிலையங்கள், பாட்லிங் யூனிட், சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல் இல்லாததால் நீரா உற்பத்தியைக் கைவிடும் நிலையில் உள்ளோம். கேரளாவில் நீரா நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை, தமிழக விவசாயிகளுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.
இதனால்,தொடங்கிய வேகத்திலேயே பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால், எஞ்சிய நிறுவனங்களும் மூடப்படும். வழிகாட்டும் குழு, ஒவ்வொரு மாதமும் கூட்டத்தை கூட்டி, விவசாயிகளிடம் கருத்து கேட்பதை மட்டும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வளர்ச்சிக்கான திட்டம் எதுவுமில்லை” என்றார்.
பொள்ளாச்சி விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் பி.கே.பத்மநாபன், தேனி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூறும்போது, “தமிழகத்தில் நீரா இறக்குவதற்கு, பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. இதற்கான பயிற்சியை தென்னை வளர்ச்சி வாரியமும் அளிக்கவில்லை. நீராவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும் வழிகாட்டவில்லை. ஒரே நாளில் கெட்டுப்போகும் தன்மை கொண்ட நீராவை, 90 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படவில்லை. விற்பனைக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவோ, வழிகாட்டவோ உதவவில்லை.
இரு நிறுவனங்களுக்கு ஒரு பதப்படுத்தல் ஆலை, பாட்லிங் யூனிட் அமைத்துத்தர வேண்டும், நீரா உற்பத்தியாளர் நிறுவனங்களை திறம்பட செயல்படுத்த நிதியுதவி அளிக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தி வருகிறோம். எனினும், எவ்வித பலனும் இல்லை” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 secs ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago