வழிப்பறி சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த லாவண்யா: திருமணமாகி குழந்தைக்குத் தாயானார்

By மு.அப்துல் முத்தலீஃப்

சென்னையில் கடந்த ஆண்டு வழிப்பறி சம்பவத்தில் கொள்ளையர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி மீண்ட லாவண்யா, திருமணமாகி பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். அவரது பிறந்த நாளிலேயே குழந்தையும் பிறந்தது சிறப்பு.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் உலுக்கியது. அன்று அதிகாலையில் பெரும்பாக்கம் தாழையூர் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்த இளம்பெண்ணைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த லாவண்யா ஜனத் (30) என்பவர்தான் அவர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

பெரும்பாக்கம் - தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது லாவண்யாவைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் அவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கினர்.

இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னர் அவர் அணிந்து இருந்த தங்க நகை, மடிக்கணினி, பணம், 2 செல்போன்கள் மற்றும் லாவண்யா ஓட்டிவந்த ஸ்கூட்டரைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

அவரைக் கொலை செய்ய அவர்கள் முயன்றனர். முகத்தில் கத்தியால் பல வெட்டுகள் வெட்டினர். எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னை விட்டுவிடுங்கள் என அவர் கெஞ்சியும் அவர்கள் இரக்கம் காட்டவில்லை. சரமாரியான வெட்டினால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் லாவண்யா. இறந்துவிட்டார் என நினைத்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், அவரது இருசக்கர வாகனத்தைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

லேசாக மயக்கம் தெளிந்த லாவண்யா தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் வெட்டப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டர் கடந்து வந்து சாலையில் விழுந்து மயங்கிவிட்டார். அதிகாலையில் அவ்வழியே சென்றவர்கள் அவரைப் பார்த்து மீட்டனர்.

சென்னையை அதிரவைத்த இச்சம்பவம் பெரிதும் பேசப்பட்டது. இரவில் தனியாகச் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரிய அளவிலான விவாதம் எழுந்தது. லாவண்யா பிழைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. காரணம் அவர் இரும்பு ராடால் தாக்கப்ப்ட்டும், முகத்தில் வெட்டப்பட்டும் அதிக ரத்தத்தை இழந்திருந்தார். ஒரு கை உடைக்கப்பட்டிருந்தது. கண்ணுக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்குப் போராடினார். அவரது நிலையை அறிந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனையில் சிகிச்சை விவரம் கேட்டறிந்து அவருக்குத் தரமான சிகிச்சை அளிக்கும்படி வலியுறுத்தினார்.

கொள்ளையர்களை உடனே பிடிக்க உத்தரவிட்டார். தினமும் லாவண்யா தலைப்புச் செய்தியாக சென்னையில் பிரபலமானார். குற்றவாளிகளைப் பிடிக்க தென் சென்னை இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் முத்துசாமி மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் லாவண்யாவின் ஸ்கூட்டரை 2 நாளில் கண்டுபிடித்தனர். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே மீட்கப்பட்டது.

தொடர்ந்து அந்தப் பகுதிகளில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியதில், பழைய குற்றவாளிகள், ஜாமீனில் வந்த குற்றவாளிகள், உள்ளூர் குற்றவாளிகள் ஆகியோரிடம் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதேபோல் செல்போன் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குற்றவாளிகளைப் பிடிக்க சைபர் கிரைம் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் தேடுதலில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (19), விநாயகமூர்த்தி (20), லோகேஷ் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன், கத்தி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஒருவார தீவிர சிகிச்சைக்குப் பின், முகத்தில் சில பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்குப்பின் லாவண்யா லேசாக குணமடைந்தார், அவரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்து தைரியம் சொன்னார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்கு நேரில் சென்று லாவண்யாவைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

லாவண்யா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ஆந்திர அரசு அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்தது. ஆனால் மருத்துவ செலவுகளை லாவண்யா வேலை பார்த்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அவர் உடல்நலம் தேறியதும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சென்னை போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

லாவண்யாவின் மனவலிமையும், உயிர் வாழ வேண்டும் என்கிற துணிச்சலையும் தமிழகமே பாராட்டியது. பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு வீரப்பெண்மணி விருதை அளித்தது. அதன் பின்னர் தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்ற லாவண்யா அங்கு ரவிச்சந்திரன் என்பவர் அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததன் பேரில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ரவிச்சந்திரன் ஸ்டார் ஓட்டல் ஒன்றின் மேலாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் லாவண்யா கடந்த ஜூன் 11-ம் தேதி பெண் குழந்தைக்குத் தாயானார்.

இதில் சிறப்பு என்னவென்றால் தனது மகளைப் பெற்றடுத்த அதே நாள்தான் லாவண்யாவுக்கும் பிறந்த நாள். தாய் மகள் இருவருக்கும் ஒரேநாளில் பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு. தனது இக்கட்டான நேரத்தில் தனக்காப்க பேசிய, எழுதிய, பிரார்த்தித்த நலம் விரும்பிகளை லாவண்யா இன்றும் மறக்கவில்லை.

தனது ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சியையும் தமிழகத்தில் உள்ள அந்த நண்பர்களுடன் நலம் விரும்பிகளுடன் லாவண்யா பகிர்ந்துகொள்கிறார். அதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஊடகத்தில் உள்ள செய்தியாளர்கள் என பலரும் அடங்குவர்.

கடுமையான சோதனையைத் தாங்கி இக்கட்டிலிருந்து மீண்ட லாவண்யா வாழ்க்கையில் சோதனைகளை சந்தித்து போராடும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்