‘துடிதுடிக்க கொலை செய்ய எப்படி மனம் வந்தது?’ - மாணவியின் தாய் கதறல்: அழகேசன் பண உதவி செய்ததாக சொன்னது பொய்

By இ.ராமகிருஷ்ணன்

அழகேசன் தங்கள் குடும்பத்துக்கு எந்த பண உதவியும் செய்யவில்லை என்று, கொல்லப்பட்ட மாணவியின் தாய் சங்கரி கண்ணீர் மல்க கூறினார்.

மாணவியைக் கொன்ற அழகேசன் தனது வாக்குமூலத்தில், ‘‘அஸ்வினியை தீவிரமாக காதலித்தேன். அவரது கல்விச் செலவுக்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்தேன். அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டுதான் உதவிகள் செய்தேன். அவர் என்னை ஒதுக்கியதால் கொலை செய்தேன்’’ என்று கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மாணவியின் தாய் சங்கரி மறுத்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறையில் நேற்று அஸ்வினியின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அதை வாங்குவதற்காக வெளியே காத்திருந்த அவரது தாய் சங்கரி கதறி அழுதுகொண்டே இருந்தார். உறவினர்கள் சமாதானம் செய்தும், தொடர்ந்து அழுதபடி இருந்தார்.

அப்போது கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:

கணவர் இறந்த பிறகு, வீடு வீடாக சென்று பாத்திரம் தேய்த்து சம்பாதித்த பணத்தில் மகனையும், மகளையும் படிக்க வைத்தேன். அஸ்வினி பிறந்ததே அதிர்ஷ்டம் என்று நினைத்து, நான் கஷ்டப்பட்டாலும் அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அக்கா படிக்கட்டும் என்று மகன் அபினேஷ் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போனான். அவளை கல்லூரியில் படிக்க வைக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. ஆனால், அவள் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக, கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்த்தேன்.

அஸ்வினி எங்கள் மீது மிகவும் பாசமாக இருந்தாள். ‘படித்து முடித்து சீக்கிரமே வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவேன். அதிக சம்பளம் வாங்கி, உனக்கு வீடு, கார் வாங்கித் தருவேன். உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன்’ என்று சிரித்துக்கொண்டே கூறுவாள்.

அழகேசன் உருவத்தில் வந்து எமன் என் மகளை கொண்டு சென்றுவிட்டான். அவளது உடலைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை. அவள் நிச்சயம் சொர்க்கம் செல்வாள். நானும் சொர்க்கம் சென்று அவளை பார்ப்பேன்.

அவனும் அக்கா, தங்கையுடன் பிறந்தவன்தானே? துடிதுடிக்க ஒரு பெண்ணைக் கொல்ல அவனுக்கு எப்படி மனம் வந்தது? அவன் நல்லவன் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பணம் கொடுத்து உதவியதாக அவன் சொல்வது துளியும் உண்மை இல்லை. அவனது நடவடிக்கை சரியில்லை என்பதால் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். போலீஸார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், மகளை இழந்திருக்க மாட்டேன். அவளுக்கு ஏற்பட்ட கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது. கொலையாளிக்கு தூக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும்.

இவ்வாறு கூறிய தாய் சங்கரி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அஸ்வினியின் உறவினர் நேதாஜி கூறியதாவது:

அஸ்வினியின் குடும்பம் அவரது தந்தை மோகன் மறைவுக்குப் பிறகு சற்று தடுமாறியது. உறவினர்களான நாங்கள் உதவி செய்தோம். வாடகை கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, மதுரவாயலில் குத்தகைக்கு வீடு எடுத்துக் கொடுத்தோம். அஸ்வினியின் படிப்பு செலவையும் கவனித்துக் கொண்டோம். அதனால், வேறு யாரிடமும் பணம் வாங்கி படிக்க வைக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அஸ்வினிக்காக அழகேசன் செலவு செய்தார் என்பதில் உண்மை இல்லை.

அஸ்வினி கொலை தொடர்பாக உண்மைக்கு மாறான பல தகவல்களை, அழகேசன் குடும்பத்தினர் திட்டமிட்டு பரப்புவதாக தெரியவருகிறது. கொலை வழக்கை திசை திருப்பவே இவ்வாறு செய்கின்றனர். இது அஸ்வினியின் இறப்பை கொச்சைப்படுத்துவதுபோல உள்ளது.

பணத்துக்காக கொலை நடந்தது என்கிறார்களே, நாங்கள் கடன் வாங்கியாவது ரூ.10 லட்சம் தருகிறோம். எங்கள் வீட்டு தேவதை அஸ்வினியை மீண்டும் உயிரோடு கொண்டுவர முடியுமா? அஸ்வினி கொலைக்கு நியாயம் வேண்டும். கொலையாளி அழகேசனை தூக்கில் போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்