தமிழகத்தில் வீட்டுக்கடன் கிடைக்காமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் குறைந்த விலையில் வீடுகள் கட்டி, மாதத் தவணையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஏழை மக்கள்.
தமிழகம் முழுவதும் வீட்டு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை அதிக மாக இருப்பதால், ஏழை, நடுத்தர மக்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக வீடுகள் கட்டி, குறைந்த விலையில் மாத தவணை முறையில் விற்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சி கண்டதால், தனியார் பில்டர்கள் போல வீட்டுவசதி வாரியமும் 2001-ம் ஆண்டுமுதல் சுயநிதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி விற்கத் தொடங்கியது. இப்போதுவரை அப்படித்தான் விற்று வருகிறது. அதனால் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே உள்ளது.
வங்கி வரவு, செலவு இல்லை
தமிழகத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள், கூலி வேலைக்குச் செல்வோர், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கட்டுமானப் பணி செய்வோர், உணவகங்களில் பணியாற்றுவோர் என அமைப்புசாரா தொழிலாளர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். கூலி, சம்பளத்தை இவர்கள் ரொக்கமாகவே பெறுகின்றனர். வங்கியில் சம்ப ளம் செலுத்தப்படுவது இல்லை. வரவு, செலவையும் ரொக்கமாகவே செய்கின்றனர். வங்கியில் பெரிய அளவுக்கு வரவு, செலவு இல்லாததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடமோ, தனியாரிடமோ இவர்களால் வீடு வாங்க முடிவதில்லை. வங்கிக் கடனும் கிடைப்பதில்லை.
“தனியார் பில்டர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை சந்தை விலைக்கு ரூ.12 கோடி வரை கொடுத்து வாங்குகின்றனர். அதனால், ஒரு படுக்கையறை வீட்டின் விலையை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கின்றனர். அவர்களால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் விலையை குறைத்து விற்க இயலாது.
ஆனால், வீட்டுவசதி வாரியம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நில ஆர்ஜித சட்டத்தின் கீழ் மிக குறைந்த விலைக்கு வாங்கிய இடத்தில் சலுகை விலையில் வீடுகள் கட்டித்தர முடியும். அடக்க விலையுடன் 10 சதவீத லாபம் வைத்துக் கொண்டாலும் ஒரு படுக்கையறை வீட்டை ரூ.12 லட்சத்துக்கு விற்க முடியும். ஆனால், வீட்டுவசதி வாரியமும் தனியார் பில்டர்கள் போல ஒரு படுக்கையறை வீட்டை ரூ.20 லட்சத்துக்குதான் விற்கிறது” என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
“கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு கிரவுண்ட் (2,400 சதுரஅடி) நிலத்தை வீட்டுவசதி வாரியம் ரூ.55 ஆயிரத்துக்கு வாங்கியது. இப்போது அந்த இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி. இந்த சந்தை மதிப்பை கணக்கிட்டுத்தான் வீட்டு விலை நிர்ணயிக்கின்றனர்.
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல வாரியத்தின் சொந்த இடத்தில், அதன் சொந்த நிதியில் வீடுகள், குடியிருப்புகள் கட்டி மாத தவணையில் விற்றால் ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவு நனவாகும். ஆனால், அதுபற்றி அரசு பரிசீலிக்கவில்லை” என்று வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் சிலர் கூறினர்.
10 லட்சம் தொழிலாளர்கள்
தமிழகம் முழுவதும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 10 லட்சம் பேர் மாத தவணையில் வீடு வாங்க தயாராக இருக்கின்றனர். அவர்களது வீட்டுக் கனவை அரசு நனவாக்க வேண்டும் என்பதே நடுத்தர, ஏழை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago