ஸ்டாலின் அணிக்கு தாவினார் ‘மிசா’ பாண்டியன்: அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சி

By டி.எல்.சஞ்சீவி குமார்

அழகிரி அணியில் இருந்த சொற்ப நபர்களில் ஒருவரான மதுரை முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன் அழகிரி அணியில் இருந்து சனிக்கிழமை ஸ்டாலின் அணிக்கு இடம் மாறினார்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாக அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்தவர் மிசா பாண்டியன். அழகிரிக்காக பல்வேறு தேர்தல் தகராறுகளில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். திருமங்கலம் இடைத்தேர்தலில் இவர் மிகத் தீவிரமாக பணியாற்றினார். சமீப காலமாக அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, எஸ்ஸார் கோபி உள்ளிட்ட பலரும் ஸ்டாலின் அணிக்கு மாறிவிட்டனர். ஆனாலும் முன்னாள் மேயர் மன்னன், முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் ஆகியோர் அழகிரியுடனே இருந்தனர்.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே மிசா பாண்டியன் அழகிரியின் வட்டாரத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அழகிரியின் ஆட்கள் அவரை தொடர்பு கொண்டபோது மொபைல் போனை எடுக்காதவர், பழங்காநத்தத்தில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு வருவதையும் தவிர்த்தார். தொடர்ந்து கடந்த முறை ஆய்வு கூட்டத்துக்காக ஸ்டாலின் மதுரை வந்தபோதும் முதல் ஆளாக மிசா பாண்டியன் சென்று வரவேற்றார். அப்போதே மிசா பாண்டியன் அழகிரியிடம் இருந்து விலகிவிட்டார் என்று தெரிந்துவிட்டது. இதுகுறித்து அழகிரியிடம் சொன்னபோது, ‘என் சார்பில் யாரும் அவரைத் தொடர்பு கொள்ளாதீர்கள். என்னை விட்டு விலகி செல்பவர்களுக்கு நன்மை நடக்குமானால் அவர்கள் விருப்பப்படியே செய்யட்டும். யாரையும் தடுக்க வேண்டாம். ஆனால், நன்றி மறந்ததற்கான பாடத்தை ஒருநாள் கற்பார்கள்’ என்று சொன்னார்’” என்றார்கள்.

இதற்கிடையே சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மதுரை மாவட்ட முன்னாள் பொருளாளர் மிசா பாண்டியன் சுமார் 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். அப்போது தன் மீது கட்சியில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக விளக்கம் கூறியதுடன் மன்னிப்புக் கடிதமும் கொடுத்ததாகத் தெரிகிறது. திமுக தலைமை தரப்பில், ‘சரி கிளம்புங்கள், விரைவில் சொல்லி அனுப்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிசா பாண்டியனிடம் பேசினோம். “தலைவரை வந்து சந்திக்கும்படி கடந்த வாரமே உத்தரவு வந்தது. அதன்படி சனிக்கிழமை சந்தித்து கட்சியில் எங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக விளக்கம் அளித்தோம். மேலும், நான் கட்சியில் 35 ஆண்டுகளாக விசுவாசமாக பணியாற்றி வருவதையும் தெரிவித்தேன். தொடர்ந்து ஸ்டாலினை சென்று சந்தித்து ஆசி பெற்றேன். மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் ஸ்டாலின் சொன்னார்” என்றார்.

மிசா பாண்டியனிடம், “தற்போது அழகிரி அணியில் இருக்கிறீர்களா? இல்லையா?’ என்று கேட்டோம். “நான் அழகிரி அணியில் இல்லை. ஆனால், கட்சியில் இருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE