கருணாநிதிக்கு விசாரணை கமிஷன் சம்மன்: 18-ம் தேதி ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது குறித்து விசாரித்து வரும் நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முழுமை பெறாத நிலையிலேயே, 2010-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலக கட்டிடம், பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசுத் தரப்பிலிருந்தும் கட்டிட நிறுவனங்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களைப் பெற்று, நீதிபதி ரெகுபதி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, கட்டிடம் கட்டும்போது முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நீதிபதி ரெகுபதி கமிஷன் முன்பு வரும் 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்போது, கட்டிடம் தொடர்பான ஆவணங்களை கருணாநிதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்மனைத் தொடர்ந்து, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தவிதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும், ஆவணங்களை மட்டும் தாக்கல் செய்தால் போதுமா என்று கேட்டும் கருணாநிதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், 18-ம் தேதி கருணாநிதி கண்டிப்பாக கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் அப்போது அவரிடம் சட்டப்படியான ஆவண நகல்களை கமிஷன் வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாமா என்று திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE