ஆச்சார்யன் திருவடி அடைந்தார் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்: ஸ்ரீரங்கம் ஆஸ்ரமத்தில் இன்று பிருந்தாவனப் பிரவேசம்

By கே.சுந்தரராமன்

ஸ்ரீ பரமபரி ஸ்ரீமுஷ்ணம் (ப்ரக்ருதம்) ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேற்று மதியம் 12.20 மணிக்கு ஆச்சார்யன் திருவடி அடைந்தார். சிறிதுகாலமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி ஆச்சார்யன் திருவடி அடைந்தார் என்று ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் முதல் பட்டம் திருக்குடந்தை தேசிகன் ஆவார். ஸ்ரீ பரமபரி ஸ்ரீமுஷ்ணம் (ப்ரக்ருதம்) ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆச்சார்ய பரம்பரையில் 11-வது பட்டமாக 01-06-1989 அன்று ஸ்ரீரங்கம் தலத்தில் துரீய ஆஸ்ரமத்தை அலங்கரித்தார்.

விருத்தாசலம் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் அவதரித்தார். ரங்க ராமானுஜ மகா தேசிகர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஸ்ரீமுஷ்ணத்துக்கு அருகில் உள்ள பள்ளியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். ஆன்மிகத்திலும் பெருமாள் மீதும் கொண்ட தீவிர பக்தியால், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து துறவறம் மேற்கொண்டு 01-06-1989 அன்று ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரம 11-வது பட்டமாகப் பொறுப்பேற் றார்.

ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ஸ்ரீ ரங்கராமானுஜ மகா தேசிக சுவாமிகள், ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மட்டுமல்லாது, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அனைவரிடத்தும் அன்புடன் பழகக்கூடியவர் சுவாமிகள். ஏழை, எளிய மக்களுக்காக, இவர் நடத்திவரும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு முதலானவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆஸ்ரமத்துக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு. அனைத்து ஊர்களிலும் தர்ம செயல்கள் நடைபெற்று வருகின்றன. வேத பாடசாலைகள் அமைக்கப்பட்டு, சிறுவர்களுக்கு வேதங்கள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. வேதங்களும் அதன் சாரங்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேர வேண்டும். அப்படி நடந்தால்தான் இந்தியா வலுவான தேசமாகும் என்று பாடசாலை ஆச்சார்யர்களுக்கு சுவாமிகள் அறிவுறுத்து வார். நியாய, தர்க்க, அலங்கார சாஸ்திரங்களில் மட்டுமல்லாது, ஜோதிடம், இசை, இலக்கியம், நாடகம், ஆயுர்வேதம், வாஸ்து சாஸ்திரங்களிலும் வல்லவர். தர்ம செயல்கள் யார் செய்தாலும் அனைவரையும் ஊக்குவிப்பார். அன்பே பிரதானம் என்பதால் பசுக்களிடம் அலாதிப் பிரியம் கொண்டவர். கோ பூஜையின் பலாபலன்களைப் பற்றி அவரது அனைத்து உரைகளிலும் அறிவுறுத்துவார். ஸ்ரீரங்கம் ஆஸ்ரமத்தில் உள்ள கோசாலையில் 180-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. சுவாமிகள் ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது அனைத்து பசுக்களுக்கும் அவரே உணவு வழங்குவார்.

இந்நிலையில், சுவாமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த சுவாமிகள் நேற்று மதியம் 12.20 மணி அளவில் ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

இதுகுறித்து, ஆண்டவன் ஆஸ்ரம சென்னை கிளையைச் சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் கூறியதாவது: மார்கழி மாத விரதத்துக்குப் பிறகு சுவாமிகளின் உடல்நலம் சுகமில்லை. சென்னை தனியார் மருத்துவமனையில் 20 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து அண்மையில் சிகிச்சை பெற்றார். பின்னர் ஆஸ்ரமம் திரும்பினார். அவ்வப்போது டயாலிசிஸ் செய்துகொள்ள மருத்துவமனை சென்று வருவார். அதுபோல் டயாலிசிஸ் செய்துகொள்ள திங்கள்கிழமை காலை 9-30-க்கு மருத்துவமனை சென்ற அவருக்கு மதியம் 12-15 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதே ஆச்சார்யன் திருவடி அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார்.

பக்தர்களின் பார்வைக்காக, சுவாமிகளின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆண்டவன் ஆஸ்ரம கிளைக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் நேற்று மாலை 3-30 மணி அளவில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கம் ஆஸ்ரமத்தில் இன்று பிருந்தாவனப் பிரவேசம் நடைபெறும் என்று ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

முதல்வர் இரங்கல்

முதல்வர் கே.பழனிசாமி இரங்கல் செய்தி: ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் தனது பூர்வாசிரமத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்ததோடு, பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். இவர் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரி, வேத பாடசாலை, கோசாலை ஆகியவற்றை மிகச்சிறப்பாக நடத்தி வந்தவர்.

இவர் ஆன்மிகப் பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்