நடுவழியில் ரயில் பெட்டிகள் கழன்றன: அரக்கோணம் அருகே பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

அரக்கோணம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு திடீரென உடைந்ததால் ஏசி பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியது. நடுவழியில் அந்த ரயில் நிறுத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

குவாஹாட்டியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. அந்த ரயில், அரக்கோணம் அடுத்த சித்தேரி அருகே வந்தபோது, ஏ 1 மற்றும் பி 1 ஆகிய இரண்டு ஏசி பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு கம்பிகள் திடீரென உடைந்தன. இதனால் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியது. அப்போது பயங்கர சத்தம் ஏற்பட் டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜூலியன் என்பவர் பலத்த காயம் அடைந்தார். உடனே, அரக்கோணம் ரயில்வே மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து அவரை மீட்டு, ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள், பொறியாளர்கள் அங்கு விரைந்து வந்து இணைப்பு கம்பியை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பின்னால் வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லக்னோ- யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பயணிகள் கடும் அவதிப்பட்டனர். எர்ணாகுளம் விரைவு ரயிலில் உடைந்த இணைப்பை சரிசெய்ய 3 மணி நேரம் ஆனது. அதன்பிறகு அந்த ரயில் புறப்பட்டு சென்றது. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில்களும் 3 மணி நேரம் தாமதமாகச் சென்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE