தீபாவளி: அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது: சிறப்பு பஸ் அறிவிப்புக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இந்நிலையில், அரசு அறிவிக்கவுள்ள சிறப்பு பஸ்களுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர், பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்கிடையே, நெல்லை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு முடிந்து விட்டது. சில ரயில்களில் 800 வரையிலும் காத்திருப்போர் பட்டியல் இருக்கிறது. இதேபோல், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் வழக்கமான பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டன.

இந்நிலையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியிட்டாலும் அடுத்த சில நிமிடங்களிலும் முன்பதிவு முடிந்துவிடும். ஆம்னி பஸ்களின் கட்டணமும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் நம்பி இருப்பது அரசு பஸ்களைத்தான். எனவே, அரசு அறிவிக்கவுள்ள சிறப்பு பஸ்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

சிறப்பு பஸ்கள் எப்போது?

இது தொடர்பாக போக்குவரத்து துறையின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது, போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கான ஏற்பாடுகள், பயணிகளின் பாதுகாப்பு, கோயம்பேட்டில் திறக்க வுள்ள சிறப்பு கவுன்ட்டர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதில், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து போலீஸ் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துவார்கள். அதன்படி, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி, சிறப்பு பஸ்களை தமிழக அரசு அறிவிக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE