மதுரை மாநகராட்சி ஆணையரின் காரை மறித்து பாஜக-வினர் தாக்க முயற்சி: வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக அறிவித்ததால் போராட்டம்

மதுரையில் பாஜக வேட்பாளர் களின் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்ததால் அந்த கட்சியினர் மாநகராட்சி ஆணையர் காரை மறித்து தாக்குதல் நடத்தினர். இவர் களின் போராட்டத்தால் மேயர், எம்.எல்.ஏ., ஆணையரை அறைக்குள் பூட்டி போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.

மதுரை மாநகராட்சியின் 85-வது வார்டில் போட்டியிட அதிமுக சார்பில் லதாகுமார், மாற்று வேட் பாளராக அவரது மகன் கதிர்வேல், காங்கிரஸ் சார்பில் முன்னாள் கவுன்சிலரான ராஜம்மாள்(70), பாஜக சார்பில் ஹரிகரசுதன்(37), பாஜக மாற்று வேட்பாளராக எஸ்.கே.கார்த்திகேயன், சுயேச் சைகளாக மகாமுனி, ஜி.சங்கரன், டி.முத்துகுமார் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் மகாமுனியின் மனுவில் போதிய விவரங்கள் குறிப்பிடப்படாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

6 பேர் மனுக்கள் வாபஸ்

இந்நிலையில் வேட்புமனுக் களை திரும்பப்பெறும் கடைசி நாளான திங்கள்கிழமை அதிமுக வேட்பாளர் லதாகுமாரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஏ.பழனிச்சாமி திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டார்.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பாஜக வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அறையைப் பூட்டி பாதுகாப்பு

அந்த சமயத்தில் லதாகுமார் போட்டியின்றி வென்றதற்கான சான்றிதழை அவரிடம் ஆணையர் சி.கதிரவன் வழங்கிக் கொண் டிருந்தார். மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் அங்கிருந்தனர். இதையறிந்த பாஜக வினர் ஆணையர் அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே புக முயன் றனர். நிலைமை மோசமானதால் மேயர், ஆணையர் உள்ளிட்டோரை அறைக்குள்ளேயே வைத்து பூட்டி, வெளிப்புறத்தில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

அதிமுக, பாஜக தள்ளுமுள்ளு

இதற்கிடையே அதிமுக நிர்வாகிகள் ஆணையர் அறையில் இருந்து போலீஸ் மற்றும் கட்சியினர் சூழ வெளியே வந்தனர். அப்போது பாஜக-வினர் கூச்சலிட்டதால் அதிமுக, பாஜக-வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் சிக்கிக்கொண்ட மேயர் உள்ளிட்டோரை கட்சியினர் மீட்டு அழைத்துச் சென்றனர். அதன்பின் பாஜக-வினர் ஆணையர் அறைக்குள் சென்று, வேட்புமனுக்களை வாபஸ் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு வேட்பாளர்கள் கையெழுத்திட்ட மனுவை காட்டி ஆணையர் பதிலளித்தார். அதை ஏற்க மறுத்த பாஜக-வினர் அறைக்குள்ளேயே கூச்சலிட்டனர். எனவே ஆணையர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஆணையரை அழைத்துச் சென்று காரில் ஏற்றி அமர வைத்தனர். அதற்குள் பாஜகவினர் அங்கு சென்று காரை சுற்றி வளைத்து நின்று முழக்கமிட்டனர். மேலும் காரின் பக்கவாட்டு பகுதிகளிலும் கைகளால் தாக்கினர். ஆனால் காருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து காரை வேகமாக கிளப்பிக் கொண்டு ஆணையர் சென்று விட்டார்.

சிசிடிவி மூலம் ஆய்வு

அதன்பின் பாஜக வேட்பாளர் ஹரிகரசுதன், மாற்று வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவில் நாங்கள் கையெழுத்திடவில்லை. தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பழனிச்சாமியின் உதவியோடு அதிமுக-வினரே இதுபோல் போலியாக கையெழுத்திட்டு முறைகேடு செய்துள்ளனர். இந்த அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவனிடம் கேட்டபோது, வாபஸ் பெறுவதற்கான மனுக்களில் பாஜக வேட்பாளர்கள் கையெழுத்திட்டு, தங்களின் முகவர்கள் மூலம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பழனிச்சாமியிடம் அளித்துள்ளனர்.

இதில் முறைகேடு செய்துள்ள தாக கூறும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE