பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண் இதயம் சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது: விமானத்தில் சென்னை வந்த இதயம்; 14 கிமீ தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

By செய்திப்பிரிவு

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் விபத்தில் சிக்கி 31 வயதுடைய பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் விருப்பப்படி உறுப்புகள் தானம் செய்வதற்காக, டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து பெண்ணின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை எடுத்தனர். இதயம் தவிர மற்ற உறுப்புகள் அனைத்தும், கர்நாடக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

அந்த பெண்ணின் இதயம் கர்நாடக மருத்துவமனைகளில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கு பொருந்தவில்லை. இதனால், கர்நாடகா மாநில மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்ட அதிகாரிகள், தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாருக்காவது இதயம் தேவைப்படுகிறதா எனக்கோரி, மூளைச்சாவு அடைந்தவரின் ரத்தப் பிரிவு, இதயத்தின் அளவு உட்பட அனைத்து விவரங்களையும் தெரிவித்தனர்.

மும்பை நோயாளி

சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த 40 வயதான ஆண் நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்பதும் அவருக்கு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் பொருத்தமாக இருப்பதாகவும் கர்நாடகா அதிகாரிகளுக்கு, தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

விமானத்தில் வந்தது

இதையடுத்து, பெங்களூர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை பாதுகாப்பாக ஐஸ் பாக்ஸில் வைத்து பெங்களூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் புதன்கிழமை பிற்பகல் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இதயத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுடன் டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு வசதியாக சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. சாலையில் யாரும் குறுக்கே செல்லாமல் இருக்க, வழியெங்கும் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்துக்கு சரியாக மாலை 4.19 மணிக்கு விமானம் வந்தது. டாக்டர்கள் குழுவினர் இதயத்துடன் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் ஏறினர்.

விமான நிலையத்தில் இருந்து மாலை 4.31 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ், பரங்கிமலை, கிண்டி, கத்திப்பாரா, சின்னமலை, கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலை வழியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலை 4.38 மணிக்கு சென்றடைந்தது. பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட இதயம், அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்த நோயாளிக்கு, பொருத்தப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

14 கி.மீ.தூரம், 7 நிமிட நேரம்

விமான நிலையத்தில் இருந்து, அடையாறு தனியார் மருத்துவமனை 14 கி.மீ. தூரமாகும். இந்த 14 கி.மீ. தூரத்தை 7 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.

மாநிலம் கடந்து வந்த இதயம்

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் கல்லீரல், கர்நாடகாவில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்த அனுப்பப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சென்னை கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் பயணம்… பேஸ் புக்கில் ஒளிபரப்பு

கடந்த ஞாயிறன்று, பெங்களூரில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது திடீரென டயர் வெடித்ததில் தலையில் அடிபட்ட 31 வயது பெண்ணுக்கு, செவ்வாயன்று மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது இதயத்தை சென்னையில் உள்ளவருக்கு பொருத்த விரைவாக அனுப்புவதற்காக போலீஸாரும், பெங்களூர் மருத்துவமனை மருத்துவர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

மருத்துவமனை அமைந்திருந்த கெங்கேரியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் வரையிலான 50 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தியிருந்தனர். இதனால், வழக்கமான பயண நேரமான 1.30 மணி நேரத்தில் பாதியளவு நேரத்தை இதனால் மிச்சப்படுத்த முடிந்தது. மேலும், சாலை சந்திப்புகளில் உள்ள கேமராக்கள் வாயிலாக இக்காட்சி பேஸ்புக்கிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE