இலவச தையல் பயிற்சி உட்பட தலித் மேம்பாட்டுக்கு உதவியவர்

By அ.சாதிக் பாட்சா

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தலித் மக்களின் முன்னேற்றத்தில் தீவிர அக்கறை காட்டினார்.

பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, இப்பகுதிகளில் தலித் மக்களிடையே செல்வாக்குள்ள தடா பெரியசாமியுடன் இணைந்து பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளார்.

தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக ஸ்ரீ ஜெயேந்திரர் மேற்கொண்ட நலப்பணிகள் குறித்து ‘தி இந்து’விடம் விவரித்தார் தடா பெரியசாமி:

2003-ஆம் ஆண்டு சங்கராச்சாரியார் எனக்கு அறிமுகம் ஆனார். தலித் மக்கள் சங்கர மடத்தின் அதிகார பீடத்தை நெருங்க முடியாது என பலர் கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரை சந்திக்கச் சென்ற போது நான் கேள்விப்பட்ட கூற்று பொய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பாஜக தலைவர் அத்வானி, தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஆகியோருக்கு கிடைத்த அதே மரியாதை சங்கர மடத்தில் எனக்கும் கிடைத்தது. அறிமுகம் ஆன சில மாதங்களிலேயே 2004-ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தார் ஸ்ரீ ஜெயேந்திரர்.

நான் தமிழகத்திலுள்ள அனைத்து இந்து மடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். ஆனால், தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியதில் சங்கரமடம் மற்ற மடங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருந்தது.

ஸ்ரீ ஜெயேந்திரர், தலித் மக்களை அரவணைத்துச் செல்வது சங்கர மடத்திலேயே பலருக்குப் பிடிக்கவில்லை.

அவரை சிலர், ‘சேரி சங்கராச்சாரியார்’ என புனைப் பெயரிட்டு அழைத்தனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் சிறிதும் அவர் கவலைப்படவில்லை. “இந்து மதத்தில் ஜாதி பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் இந்து மதம் வளர்ச்சியடையாது” எனக் கூறுவார். அவர் சொன்னது போலவே நிஜத்திலும் வாழ்ந்து காட்டினார்.

நான் நக்சல் இயக்கத்தில் செயல்பட்டு, பின்னர் அரசியலுக்கு வந்தவன். பல்வேறு அரசியல் தலைவர்களைப் பார்த்தவன்.

எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் நான் எந்தத் தலைவராக இருந்தாலும் புறக்கணித்துவிட்டு வெளியே வரத் தயங்கியதில்லை. சுமார் 14 ஆண்டுகளாக தலித் இயக்க பிரமுகரான எனக்கு உரிய மரியாதையை வழங்கி அரவணைத்தவர்.

நான் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக சேவை அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, ‘நந்தனார் சேவாஸ்ரமம் ட்ரஸ்ட்’ என பெயர் வைக்கச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் ஸ்ரீ ஜெயேந்திரர். பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30 தலித் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரம் உயர உதவிக்கரம் நீட்டினார்.

தலித் மாணவர்கள் 20 பேர் உயர் கல்வி பயில உதவி செய்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்க உதவினார். ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை கிடைக்க உதவினார். இப்படி பல்வேறு உதவிகளை இப்பகுதி தலித் மக்களுக்காக செய்துகொடுத்தார்.

“நீங்கள் தலித் மக்களுக்கு நல்லது செய்வதற்காக உழைக்கிறீர்கள். உங்கள் பணிக்கு எனது உதவி தேவை எனில் தாராளமாகக் கேளுங்கள். நான் தலித் மக்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்றவர் ஸ்ரீ ஜெயேந்திரர். தன்னிடம் உதவி கேட்டு வந்த நிறைய தலித் இயக்க பிரமுகர்களுக்கு பெரிய அளவிலான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

பெரம்பலூர் ரஞ்சன்குடி கிராமத்தில் தலித் இளைஞர்களுக்காக தொழிற்பயிற்சி மையம் ஒன்றும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயில்வதற்கு தேவையான நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் ஒன்றும் உருவாக்கத் திட்டமிட்டிருந்தேன்.

இதுகுறித்து சங்கராச்சாரியாரிடம் தெரிவித்தேன். ‘நல்ல விஷயம் தாராளமாக செய்யலாம்’ எனச் சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். அந்தப் பணி தொடங்கும் முன்பே அவர் மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது இழப்பு தலித் சமூகத்துக்கு பேரிழப்பு என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்