ஸ்ரீ பரமபரி ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ஆச்சார்யன் திருவடி அடைந்ததையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ள பெரிய ஆண்டவன் நேற்றி ஆஸ்ரமத்தில் பிருந்தாவனப் பிரவேசம் (நல்லடக்கம்) நடைபெற்றது.
விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் 1935-ம் ஆண்டு வைகாசி திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவர், பெருமாள் மீது கொண்ட தீவிர பக்தியால் குடும்பத்தைப் பிரிந்து துறவறம் மேற்கொண்டு 1989-ம் ஆண்டு ஜூன் 1-ல் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 11-வது பட்டமாகப் பொறுப்பேற்றார். அன்று முதல் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் என்றும், ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டார்.
வேதபாடசாலை, கோசாலை
ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியை 1996-ம் ஆண்டில் இவர் நிறுவினார். இக்கல்லூரியில் தற்போது 4,000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
வேதங்கள் மட்டுமல்லாது, ஜோதிடம், இசை, ஆயுர்வேதம் உள்ளிட்டவற்றிலும் தேர்ச்சி பெற்றவர் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள். இவர் பட்டத்துக்கு வந்த பிறகு 10-க்கும் மேற்பட்ட வேத பாடசாலைகளை நிறுவி சிறுவர்களுக்கு வேதங்களை இலவசமாக கற்றுக் கொடுக்கும் பணியைத் தொடங்கினார். இப்பணி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீரங்கத்தில் இவரால் நிறுவப்பட்ட கோசாலையில் தற்போது 180-க்கும் மேற்பட்ட பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆச்சார்யன் திருவடி அடைந்தார்
இந்நிலையில், ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மார்ச் 19) பகல் 12.30 மணியளவில் ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.
மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆண்டவன் ஆஸ்ரமக் கிளையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், அங்கிருந்து வேனில் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ள பெரிய ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. ஆஸ்ரமத்தில் உள்ள மண்டபத்தில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஆச்சார்யன் திருவடி அடைந்த ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளை விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து, அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை முதலே நான்கு வேதங்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட வேத பாராயணங்கள் ஓதப்பட்டன. நேற்று காலை 10 மணியளவில் சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
17 கலசங்களால் திருமஞ்சனம்
இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பிரம்ம ரதத்தை பக்தர்கள் சுமந்துகொண்டு ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் வலம் வந்தனர். இந்த ரதத்தோடு 17 கலசங்களில் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, ஆண்டவன் சுவாமிகளின் உடலுக்கு திருமஞ்சனம் செய்விக்கப் பட்டது.
அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் உடல், அமர்ந்த நிலையில் பெரிய மூங்கில் கூடையில் வைக்கப்பட்டு, ஆஸ்ரமத்தின் பிருந்தாவனத்தில் அமைக்கப்பட்டிருந்த 8 அடி ஆழம், 5 அடி அகலம் கொண்ட பள்ளத்தில் உப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றுடன் முற்பகல் 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வாழ்நாளில் அவர் பயன்படுத்திய பொருட்கள், பூஜைப் பொருட்கள், சாளக்கிராமம் ஆகியவையும் அவருடன் சேர்ப்பிக்கப்பட்டன.
திருவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிகன், நித்யானந்தா, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சுவாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர், பெரிய ஆண்டவன் ஆஸ்ரம வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோயில்களில் இருந்து மரியாதை
திருப்பதி வெங்கடாசலபதி சுவாமி கோயிலில் இருந்து சேஷாத்திரி தலைமையில் மலர் மாலை எடுத்து வரப்பட்டு, ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோன்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் மலர் மாலை எடுத்து வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
10-வது பட்டம் அருகில்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 10-வது பட்டம் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே, 11-வது பட்டம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு பிருந்தாவனப் பிரவேசம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago