சென்னை விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 270 கி.மீ.க்கு மழைநீர் வடிகால்வாய்கள்: திட்ட அறிக்கை விரைவில் தயாராகிறது

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 270 கி.மீ. தூரத்துக்கு புதிதாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராகவுள்ளது. அதற்கான தயாரிப்புக் கூட்டம் ரிப்பன் வளாகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

சென்னையில் தற்போது சுமார் 1,800 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. இதில் பழைய மாநகராட்சி எல்லைக்குள் 1,200 கி.மீ. தூரமும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 600 கி.மீ. தூரமும் மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளன. ஆனால், 176 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்து 426 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு தற்போதுள்ள வடிகால்வாய்கள் போதாது.

எனவே, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உலக வங்கியின் ரூ.1,100 கோடி நிதியில் 270 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது அத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வட கிழக்கு பருவ மழை தொடங்கும் முன், அக்டோபர் மாதத்தில் மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்கும் பணி முடிவுறும் என்று மாநகராட்சி கூறியிருந்தது. அதன்படி, கடந்த 6-ம் தேதி மழைநீர் வடிகால்வாய்கள் பற்றிய ஆய்வறிக்கை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “3 ஆண்டுகள் நடைபெறும் இத்திட்டத்தின் கீழ் அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்படும். ஏற்கெனவே மழைநீர் வடிகால்வாய்கள் உள்ள இடங்களில் அவற்றை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE