இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் உள்ள கொத்து புரோட்டாவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து ஏதும் கலக்கப்படவில்லை என அரசு நடத்திய பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் கொத்து புரோட்டாவில் ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சிங்கள இளைஞர்களால் அந்த உணவகம் கடந்த பிப். 26 அன்று அடித்து நொறுக்கப்பட்டது.
கடைகள் மீது தாக்குதல்
அதைத் தொடர்ந்து அம்பாறையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு கடைகள் தாக்கப்பட்டன. இந்நிலையில், முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் உணவகங்களில் பறிமாறப்படும் உணவுகளில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்துகளைக் கலந்து சிங்கள பவுத்த ஆண்களுக்கு வழங்குவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது.
இதனால் கண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. கடந்த மார்ச் 4-ம் தேதி வரை பல இடங்களில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் பவுத்த மதத்தைச் சேர்ந்த முதியவரும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் பலியாயினர்.
கலவரம் பரவுவதைத் தடுக்க கடந்த 6-ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு அவசர நிலையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரகடனப்படுத்தினார். மேலும், மார்ச் 7-ம் தேதி சமூகவலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட இணைய சேவைகளையும் அரசு முடக்கியது.
புதிய அமைச்சர் நியமனம்
அம்பாறை மற்றும் கண்டியில் நடைபெற்ற மதக் கலவரத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சட்டம், ஒழுங்கு அமைச்சக பொறுப்பு, ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் ரஞ்சித் மத்தும பண்டாரா நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதனிடையே, சிங்கள பவுத்தர்களின் ஆண்மையை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்து கலந்து விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கடையில் இருந்த புரோட்டாவை ரசாயன பகுப்பாய்வுக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்திருந்தனர்.
சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கையை காவல்துறை ரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்ககே நேற்று வெளியிட்டார். இந்த அறிக்கையில், புரோட்டாவில் எவ்வித மருந்தும் கலக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் வேண்டுகோள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சமூக வலைதளம் ட்விட்டர் மூலமாக இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழும் மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன். வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாக வாழ்வோம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago