சென்னையில் பொது இ-சேவை மையங்களால் மவுசு இழந்த அம்மா திட்ட முகாம்

சென்னையில் நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டதால், அம்மா திட்ட முகாம்களின் மவுசு குறைந்து வருகிறது. இந்த முகாமில், மனு அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவைச் சான்று, முதியோருக்கான ஓய்வூதியம், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக வருவாய் துறை அலுவலகங்களை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அங்கு உடனடியாக சான்றிதழ்கள் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் கிடைப்பதற்காக, அதிமுக அரசு பதவியேற்ற உடன் அம்மா திட்டம் முகாம் என்ற திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித் தார். வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் இந்த முகாமில், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய மேற் கண்ட சான்றிதழ்கள் வேண்டி விண் ணப்பித்தால், அன்றைய தினமே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதனால், தொடக்கத்தில் இத்திட்டத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முகாம்களுக்கு வந்து, தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பித்து பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி சென்னையில், 14 இடங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில், நகர்ப்புற பொது இ-சேவை மையங்களை திறந்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை அங்கேயே பெற்றுவிடுவதால், அம்மா திட்ட முகாம்களுக்கு செல்வதில்லை.

இதுகுறித்து, அம்மா திட்ட முகாமில் பங்கேற்ற வருவாய் துறை அதிகாரி ஒருவர் `தி இந்து’விடம் கூறுகையில், “அம்மா திட்ட முகாம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்பத்தில் ஏராளமானவர்கள் இந்த முகாமுக்கு வந்து தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வாங்கிச் சென்றனர்.

தற்போது, அரசு இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டதையடுத்து, இந்த முகாம்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம், இந்த முகாம் வாரத்தில் ஒருநாள்தான் நடைபெறுகிறது.

ஆனால், இ-சேவை மையங்கள் தினமும் செயல்படுவதால் பொது மக்கள் தங்களுக்கு வசதிப்படும் சமயத்தில் சென்று வாங்குகின்றனர். சிலர் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தற்போது நூற்றுக்கும் குறைவானவர்களே வருகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE