வே
தாந்தா குழுமத்தின் ஓர் அங்கம் ஸ்டெர்லைட் காப் பர் நிறுவனம். தூத்துக் குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996 முதல் உற்பத்தியை தொடங்கியது.
இந்தியாவில் உள்ள முன்னணி தாமிர உருக்காலையான இந்த ஆலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதனை உருக்கி தாமிரம் பிரித்தெடுக்கப்படு கிறது. ஆலையின் முக்கிய உற்பத்தி பொருட்கள் தாமிர காத்தோடு (cathode) மற்றும் தாமிர கம்பிகள் ஆகும். ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமி ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரத்தை தவிர இணை பொருட்களான கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஜிப்சம் போன்றவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாட் டின் தாமிர தேவையில் பெரும் பகுதியை ஸ்டெர் லைட் நிறுவனம் பூர்த்தி செய்கிறது.
இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனக் கூறி ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த எதிர்ப்புகளை அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் முறியடித்து ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆலை விரிவாக்கம்
தாமிரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்தது. கூடுதலாக, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலையை நிறுவ முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்றுவிட்டதாக ஸ்டெர்லைட் நிறுவனம் கூறுகிறது.
ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள், ‘ஏற்கெனவே உள்ள ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆலை விரிவாக்கத்தால் பாதிப்பு மேலும் இரு மடங்கு அதிகரிக்கும். இதனால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்’ எனக் கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் ஆதரவு
ஆலைக்கு அருகிலிருக்கும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 44-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்தல் போடக்கூட போலீ ஸார் அனுமதி மறுப்பதாக கூறி திறந்தவெளியில் அமர்ந்து இரவு பகலாக அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினர் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே உள்ள ஆலையை மூடக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் ஜி.கே. மணி நேற்று கிராம மக்களை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களும் தற்போது பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நேற்று, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் கோரம்பள்ளம் அரசு ஐடிஐ மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தி வரும் எம்.கிருஷ்ணமூர்த்தி `தி இந்து’ நாளிதழிடம் கூறிய தாவது:
ஸ்டெர்லைட் ஆலை நீர், நிலம், காற்று, நிலத்தடி நீர், கடல்வளம் என அனைத்தையும் மாசுபடுத்தி வருவதால், மக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். இந்த ஆலை யால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று, நீர், நிலத்தடி நீர், நிலத்தில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதாக அரசு நிறுவனங்களே தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளன. புற்றுநோய், தோல் நோய், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரங்களிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆபத்துகள் தொடர் பாக ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆலை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையில் உள்ள தகவல் கள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதம் வேலைவாய்ப்பு என்பதும் பொய். இங்கு பணிபுரிபவர்கள் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார வளர்ச்சி என்பதும் ஏமாற்று வேலை.
சந்ததியை காக்க போராட்டம்
எனவே, தங்கள் உயிரைக் காக்க, எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க மக்கள் போராடுகிறார்கள். குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடங்கிய இப்போராட்டம் தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும், ஆலையின் பாதிப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்களை சேகரித்து வருகிறோம். அதனை விரைவில் வெளியிடுவோம். ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு எம்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர் லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம்: ஆலை விரிவாக்கத்துக்கு தேவையான அனுமதிகளையும் முறையாக பெற்றுள்ளோம். சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சி மற்றும் அப்பகுதி மக்களின் நலனே எங்களது பிரதான நோக்கம். ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து எந்த கழிவுகளும் வெளியேற்றப்படுவதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இணை பொருட் கள் தயாரிக்கிறோம். மேலும், நிலத் தடி நீரையோ, தாமிரபரணி ஆற்று தண்ணீரையோ பயன்படுத்தப் போவதில்லை. முற்றிலும் கடல்நீரை குடிநீராக்கியே பயன் படுத்தவுள்ளோம்.
மேலும், எங்களுக்கு தேவையான மின்சாரத்தை எங்களது அனல்மின் நிலையத்தில் இருந்தே பெற்றுக் கொள்வோம். 4 மடங்கு உற்பத்தி திறன் கொண்டதாக விரிவாக்கம் செய் யப் போவதாக கூறுவது வதந்தி. தற்போது, 4 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 4 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், ஆலையில் 70 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர். விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2 ஆயிரம் பேர் நேரடியாகவும் 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பெறுவார்கள்.
சுற்றுச்சூழல் பாதிப்பை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆன் லைன் மூலம் 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கிறது. எனவே, எந்தவித விதிமீறலுக்கும் வாய்ப்பில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் நோய் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநா தன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நோக்கம் ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது என்பதுதான். எனவே, ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலை யை தடை செய்து, விரிவாக்க பணி யை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர் பாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது தவறான கருத்து. இந்த ஆலை புதிதாக நிறுவப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. தற்போது விரிவாக்கம் செய்வதில் தங்களுக்கு பிரச்சினை இருப்பதாக கூறி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்கள் போராடி வருகின்றனர். இதனை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஆலை நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அரசு நிச்சயம் நல்ல தீர்வை ஏற்படுத்தும். மாநில அரசின் கருத்தை கேட்டு இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மத்திய அரசு நேரடியாக அனுமதி அளித்துள்ளது. இதில் மாநில அரசின் பங்கு இல்லை. அதேநேரத்தில் திட்டத்தை அமல்படுத்துகின்ற நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து, அந்த திட்டம் வராமல் இருப்பதற்கான பணிகளை மாநில அரசு செய்யும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஸ்டெர்லைட் மட்டும் ஏன்?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல, மேலும் சில மோசமான அபாயகரமான ரசாயன ஆலைகளும் செயல்படுகின்றன. தூத்துக்குடியை சுற்றி சுமார் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டும் போராட்டம் வெடித்திருப்பது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “எந்த அபாயகரமான தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில் இருக் கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. ஆனால், உச்சக்கட்ட பாதிப்பு ஸ்டெர்லைட் ஆலையால் தான் ஏற்படுகிறது என்பதால் அதற்கு எதிராக முதலில் களம் இறங்கி யுள்ளோம்” என்று பதில் அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago