50 வயதில் தொழில் கல்வி சான்றிதழ் பெற்ற பெண்: கற்கும் பாரதம் திட்டத்தில் பயின்றவர்

அனைவரும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்' உலக எழுத்தறிவு தினம்' உலகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லாமை இல்லாமை ஆக்கு வோம் என்ற அடிப்படையில் நாட்டில் அனைவருக்கும் கல்வி, கற்கும் பாரதம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களை குறி வைத்து நடைபெற்று வரும் இத்திட்டங் களால் பலர் பயனடைந்து வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மட்டும் ஆரம்பப் பள்ளிகளில் 99.1 சதவீத மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இது போல் கற்கும் பாரதம் திட்டம் மூலம் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய 50 ஆண்டு வாழ்நாள் கனவை நிறைவேற்றி இருக்கிறார் அங்கம்மாள்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி பகுதியில் மண்மாலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள். ‘‘மண்மாலை கிராமத்தில் கற்கும் பாரதம் சார்பில் கணக்கெடுப்பு நடைபெற் றது. அதன் அடிப்படையில் அங்கம்மாள் போன்று 50 வயதுக்கு மேல் உள்ள 20 பேருக்கு தொழில் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது'' என்கிறார் திட்டத்தின் தலைவர் பாலாஜி.

இந்த தொழில்முறை படிப்பில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை தயாரிக்க கற்றுத்தரப்பட்டுள்ளது. 6 மாத காலம் நடத்தப்படும் இப்படிப்பில் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வில் கல்வியறிவு அறவே இல்லாத அங்கம்மாள் தேர்ச்சி பெற்றுள்ளார். மண்மாலை கிராமத்தை விட்டு வெளியே வராத அவரை 'உலக எழுத்தறிவு நாளில்' ஆளுநர் ரோசய்யா தொழில் கல்வியில் தேர்ச்சி பெற்றதற்கான தேசிய திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் சான்றிதழை வழங்கி பெருமைப்படுத்தினார்.

சான்றிதழை இறுக்கமாக பற்றி இருந்த அங்கம்மாள் கூறுகையில், ‘‘எனக்கு சாம்பிராணி, ஊதுபத்தி செய்ய கத்துக்கொடுத்தாங்க. 6 மாசம் கற்றேன்'’ என்கிறார் கண்ணீர் மல்க.

தற்போது தமிழ்நாட்டில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் பெரம் பலூர், அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ண கிரி ஆகிய 9 மாவட்டங்களில் வயது வந்தோர் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 17.8 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். வரும் கல்வியாண்டில் நடைபெறும் தேர்வில் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். அப்போது அங்கம்மாள் போன்ற மேலும் பலர் தங்களில் நிறைவேறாத கல்விக் கனவை நிறைவேற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE